பசுமை எரிசக்தி உற்பத்தி | “தமிழகத்துக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்” -நவாஸ்கனி எம்.பி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: “புதிய தொழில்நுட்பங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்ற தெளிவான, ஆழமானத் திட்டங்கள் மத்திய அரசிடம் இல்லை” என்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவரும், எம்.பியுமான கே.நவாஸ்கனி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதா 2022 மீதான விவாதத்தின் போது இதனை அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து திங்கள்கிழமை மக்களவையில் கே.நவாஸ்கனி எம்.பி. பேசியது: “பாரிஸ் உடன்படிக்கையில் நம்முடைய நாடு கையொழுத்திட்டு ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு பிறகுதான் மத்திய அரசு விழித்துக்கொள்ள முயற்சிக்கின்றது என்ற நிலை உள்ளது. இப்போதாவது பசுமை ஆற்றலின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டு அதில் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த அரசு வழக்கம்போல கொடுக்கும் தவறான வாக்குறுதிகள், உறுதியற்ற நம்பிக்கைகளை போல் இருக்கக் கூடாது. வளரும் தலைமுறை நம் சந்ததியினர் இந்த மண்ணில் தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற தேவையை கருத்தில் கொண்டு பாரிஸ் ஒப்பந்தமான என்டிசி (Nationally determined contributions) இலக்கை அடைவதில் இந்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆனால், நம்முடைய அரசு நிர்ணயித்திருக்கும் இலக்கு என்பது இயற்கை உணர்த்தும் அவசரத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதை வருத்தத்தோடு இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

உலகில் 29 சதவீத பசுமை இல்ல உமிழ்வை (Greenhouse emission) கொண்டிருக்கும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அவற்றை 2050-க்குள் நிகர பூஜ்யமாக்கும் இலக்கை நிர்ணயித்து உள்ளன. உலகில் 27 சதவீத பசுமை இல்ல உமிழ்வைக் கொண்ட சீனா 2060-ம் ஆண்டில் பசுமை இல்ல உமிழ்வு நிகர பூஜ்யமாக மாற இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்தியா 2070-ல் தான் பசுமை இல்ல உமிழ்வை நிகர பூஜ்யமாக மாறுவதற்கு இலக்கை நிர்ணயித்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், உலகின் பசுமை இல்ல உமிழ்வுகளில் இந்தியாவின் பங்கு வெறும் 6 சதவீதம் மட்டுமே. மிகக் குறைவான பசுமை இல்ல உமிழ்வை கொண்டுள்ள நம் நாட்டிற்க்கு, மிக மிக அதிகமான கால இடைவெளியில் தான் நிகர பூஜ்ஜியம் இலக்கை அடைய முடியும் என நிர்ணயிப்பது உள்ளபடியே ஒரு பெரும் முரண்பாடாகும். இந்த எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதா 2022 நோக்கங்களாக தொழில்துறை கட்டிடங்கள் போக்குவரத்து போன்ற துறைகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவையை அதிகரிப்பதற்காக எனக் கூறுகிறோம். ஆனால் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியை உருவாக்குவதற்கான புதிய தொழில்நுட்பங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்ற எந்த தெளிவான ஆழமான திட்டங்களும் அரசிடம் முழுமையாக இல்லாதது வியப்பளிக்கிறது.

உங்கள் இலக்குகள் வெறும் இலக்குகளாகவே இருந்துவிடக் கூடாது. அதனை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் செயல் முறைகளையும் தெளிவாக வகுத்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மக்களின் வரிப்பணத்தை வீணாக்காமல் இந்த இலக்குகளை அடைய நிதி செயல்திறன் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்துறை மற்றும் நிலப்பயன்பாடு மாற்றம் (Land-use change) உள்ளிட்ட துறைகள் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் கிட்டத்தட்ட 15 சதவிகித பங்களிக்கின்றன. இந்தத் துறைகளில் உமிழ்வை குறைக்க அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை எனத் தெரிகிறது. இந்த அரசு சூரிய ஆற்றலில் கவனம் செலுத்தும் அதேவேளையில் கிட்டதட்ட 80 சதவீத சோலார் எனர்ஜியின் கூறுகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. சீனாவை சார்ந்து இருப்பதை குறைக்கும் இலக்கோடு அரசு 2.6 பில்லியன் டாலர்களை செலவழிக்கும் திட்டத்தை அரசு முன் வைத்திருக்கிறது.

இதில் பெரும் வினோதம் என்னவென்றால், இந்தத் தொகையின் பெரும்பகுதி பிரதமரின் நண்பர்களான அதானி மற்றும் அம்பானிக்கு செல்வது தான். வழக்கம்போல இதிலும் உங்களுடைய விசுவாசத்தை உங்கள் நண்பர்களுக்கு நிவர்த்தியாக செய்து முடித்து விட்டீர்கள். இந்த இலக்கை மட்டும் எந்தவித குறையும் இல்லாமல் நிவர்த்தி செய்து விடுகிறீர்கள்.

புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி (renewable energy) உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. காற்றாலை மின்உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. எங்களுடைய தமிழ்நாடு நாட்டின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 45 சதவீதம் பங்களிக்கிறது. தமிழ்நாடு போன்ற பசுமை எரிசக்தி உற்பத்தி செய்யும் மாநிலங்களை ஊக்குவிக்கும் வண்ணம் போதுமான நிதி மற்றும் ஊக்கத் தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கடலோர பகுதிகளில் குறிப்பாக என்னுடைய நாடாளுமன்ற தொகுதியான இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் காற்றாலைகள் அதிகம் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஒன்றிய அரசு ஆராய வேண்டும். இங்கு சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் புதுப்பிக்கப்பட்ட எரி சக்தியை உருவாக்க முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் குறிப்பாக கோயம்புத்தூர் பொள்ளாச்சி போன்ற பகுதிகளிலும் காற்றாலைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. அதனையும் அரசு பரிசீலிக்க வேண்டும். பயோமாஸ் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயிரியல் கழிவுகளை கொண்டு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை பெறுவதற்கு ஒரு பெரும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 21 மாநகராட்சி நகரங்களிலும், 140 நகராட்சிகளிலும் தினமும் டன் கணக்கில் உயிரியல் கழிவுகள் உருவாகின்றன.

இதனை எரிசக்தியாக மாற்றினால் நிலக்கரி அடிப்படையிலான மின்சாரத்தைக் குறைக்க சாதகமான ஒரு நிலை ஏற்படும். எனவே, மத்திய அரசு கவனம் கொண்டு தமிழகத்திற்கு சிறப்பு திட்டத்தை வகுத்து கூடுதலான நிதி உதவியை வழங்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் பேசினார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்