குஜராத், ராஜஸ்தான், உ.பி., பஞ்சாபில் பரவும் மர்ம நோய் - வடமாநிலங்களில் 16 ஆயிரம் கால்நடைகள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் மர்ம நோயால் பசுக்கள் உள்ளிட்ட 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

நோயால் பசுக்கள் உயிரிழப்பதால் பால் வாங்க மக்கள் அஞ்சுகின்றனர். கால்நடைகள் உயிரிழக்கும் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.

கடந்த 1929-ம் ஆண்டில் ஆப்பிரிக்க கண்டத்தில் கால்நடைகளுக்கு லம்பி ஸ்கின் நோய் பரவுவது கண்டறியப்பட்டது. அதன்பிறகு கடந்த 2015-ம் ஆண்டில் துருக்கி, கிரேக்கம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கால்நடைகளுக்கு இந்நோய்பரவியது. கடந்த 2019-ம் ஆண்டில்வங்கதேசத்தில் இந்த நோய் கால் பதித்தது. தற்போது இந்தியா உட்பட ஆசியாவின் 23 நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவில் முதல் பரவல்

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், 5 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு இந்நோய் பரவுவது முதல்முறையாகக் கண்டறியப்பட்டது. அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளில்22 மாநிலங்களில் கால்நடை களுக்கு இந்த நோய் பரவியுள்ளது.

குறிப்பாக, கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகளுக்கு லம்பி ஸ்கின் நோய் வேகமாகப் பரவி வருகிறது. குஜராத்தில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 17 மாவட்டங்களின் கால்நடைகளுக்கு இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை பசுக்கள் உட்பட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இதுகுறித்து குஜராத் கால் நடைத் துறை அமைச்சர் ராகவ்படேல் கூறும்போது, ‘‘நோய் பரவலைத் தடுக்க மாநிலம் முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.

அமுல் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சோதி கூறும்போது, ‘‘குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் இருந்து நாள்தோறும் 2 கோடிலிட்டர் பாலை கொள்முதல் செய்வோம். தற்போது பால் கொள்முதல் பாதியாகக் குறைந்துள்ளது’’ என்றுதெரிவித்தார்.

ராஜஸ்தானின் 16 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு இந் நோய்பரவி உள்ளது. அந்த மாநிலத்தில் சில வாரங்களில் மட்டும் பசுக்கள் உட்பட 4 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதுகுறித்து மாநில தலைமைச் செயலர் உஷாசர்மா கூறும்போது, ‘‘கால்நடைகளுக்கு பரவும் லம்பி ஸ்கின் நோயைதடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கால்நடை களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்தி வரு கிறோம்’’ என்று தெரிவித்தார்.

மர்ம நோய் பாதிப்பால் தோலில் கட்டிகளுடன் காணப்படும் பசு.

உ.பி. முதல்வர் யோகி உத்தரவு

உத்தரப்பிரதேசத்தின் அம்ரோகா மாவட்டம், ஹசன்பூர் பகுதியில் உள்ள கோசாலையில் 50 பசுக்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. லம்பி ஸ்கின் நோயால் அவை உயிரிழந்தனவா அல்லது வேறு காரணத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மட்டுமன்றி உத்தராகண்ட், மத்தியப்பிரதேசம், பஞ்சாப்,ஹரியாணா, பிஹார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் கால்நடைகளுக்கு இந்நோய் பரவுவது கண்டறியப்பட்டிருக்கிறது. நோய் பரவலை ஆரம்ப நிலையிலேயே தடுக்க அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்பட்ட பசுக்கள், எருமைகள் மேய்ச்சல் இடங்களில் ஆங்காங்கேஉயிரிழந்து கிடக்கின்றன. ஏராளமான பசுக்கள் நோயால் உயிரிழப்பதால் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பால் வாங்கபொதுமக்கள் அஞ்சுகின்றனர். இதன் காரணமாக வடமாநிலங்களில் பால் உற்பத்தி, விநியோகம்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள் ளது. விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

ராஜஸ்தானின் ஜோத்பூர் அருகேயுள்ள தின்வாரி பகுதியைச் சேர்ந்த ராம் என்பவர் கூறியதாவது:

எங்களது கிராமத்தில் 150 குடும்பங்கள் வசிக்கின்றன. சில வாரங்களில் மட்டும் ஏராளமான பசுக்கள்உயிரிழந்துவிட்டன. நோய் பரவல் அச்சம் காரணமாக அவற்றை யாரும் அப்புறப்படுத்த முன்வரவில்லை. உள்ளாட்சி நிர்வாகமும் மெத்தனமாகச் செயல்படுகிறது.

பசுக்களிடம் இருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவி விடுமோ என்ற அச்சம் காரணமாக எங்கள் கிராமத்தில் இருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேறி விட்டனர்.வெளியூர்களில் இருந்து எங்கள் கிராமத்துக்கு வேலைக்கு வருவதற்குகூட தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர். ராஜஸ்தான் மட்டுமின்றி பெரும்பாலான வடமாநிலங்களில் இதே நிலைதான் காணப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு இந்த நோயைக் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பசுக்கள் மர்மமான முறையில் இறப்பது குறித்து மற்றுமொரு விவசாயி கூறும்போது, ‘‘கறவை பசுக்களை மட்டுமே தாக்கக் கூடிய பெரியம்மை நோயாக இருக்குமோ என்ற அச்சமும் இங்குள்ள மக்களிடம் பரவலாக உள்ளது’’ என்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாக கொண்டு உலக கால்நடைகள் சுகாதார அமைப்பு (டபிள்யூ.ஓ.ஏ.ஹெச்) செயல்படுகிறது. இந்த அமைப்பில் இந்தியா உட்பட 182 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

டபிள்யூ.ஓ.ஏ.ஹெச். வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘லம்பி ஸ்கின் நோய் கால்நடைகளுக்கு மட்டுமே பரவும். மனிதர்களுக்கு ஒருபோதும் பரவாது. இந்த வகை நோயால் இதுவரை மனிதர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் ஜூனாகத் பகுதியில் செயல்படும் காமதேனு விலங்கியல் பல்கலைக்கழக பேராசிரியர் கத்தாரியா கூறும்போது, ‘‘லம்பி ஸ்கின் போன்ற நோயால் பாதிக் கப்பட்ட பசுக்கள், எருமைகளிடம் இருந்து பெறப்படும் பாலை சூடுசெய்யும்போது அனைத்து கிருமிகளும் அழிந்துவிடும். எனவே பால்மூலம் மனிதர்களுக்கு இந்த வைரஸ்பரவ வாய்ப்பில்லை’’ என்றார்.

மனிதர்களுக்கு பரவாது:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மருத்துவர் எஸ்.திலகர் கூறியதாவது:

‘லம்பி ஸ்கின்’ நோய் என்பது புதிதாக கண்டறியப்பட்டுள்ள வைரஸ் பாதிப்பாகும். தென் ஆப்பிரிக்கா நாட்டில் காணப்படும் இந்த வைரஸ் இந்தியாவுக்கு வந்துள்ளது. ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாக பரவும் வைரஸால் மாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸால் பாதிக்கப்படும் மாடுகளின் தோல் மீது கட்டிகள் ஏற்படுகின்றன. மாடுகள் எதுவும் சாப்பிடாமல், சோர்வாகவே இருக்கும். பாலின் அளவும் குறைந்துவிடும். நோய் பாதிப்புள்ள மாடுகளின் பாலை நன்றாக காய்ச்சி குடிக்கலாம். பசுக்கள், நோயின் தீவிரத்தால் நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தடுப்பூசி மட்டுமே தீர்வாகும். ஆனால், தடுப்பூசி கண்டுபிடிக்க சில ஆண்டுகள் ஆகலாம். தற்போதைக்கு தேவையான சிகிச்சை அளித்தால் மட்டுமே மாடுகளை காப்பாற்ற முடியும். முக்கியமாக, நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களில் இருந்து மாடுகளை, மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுப்பதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும். இந்த நோய் மாடுகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்