விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மக்களவை நேற்று காலை கூடியதும், காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து, “மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன” என கோஷம் எழுப்பினர். விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர்.

அவர்களை சமாதானப்படுத்தி கேள்வி நேரத்தை தொடர்ந்து நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா முயன்றார். ஆனால் அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை. எதிர்க்கட்சியினரின் அமளி தொடர்ந்ததால், அவையை மதியம் 2 மணி வரை அவர் ஒத்தி வைத்தார்.

மதியம் மக்களவை மீண்டும் கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் மீண்டும் அமலாக்கத் துறை விவகாரத்தை எழுப்பி கோஷங்கள் எழுப்பினர். இதனால் மக்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை நேற்று காலை கூடியதும், அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தும் விவகாரம், அக்னி பாதை திட்டம் உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த கோரி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர். அவற்றை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நிராகரித்தார்.

எதிர்க்கட்சிகளை அடக்க, தன்னாட்சி மிக்க விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.

இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி நிலவியது. இதையடுத்து அவையை நண்பகல் 12 மணி வரை வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தார்.

அவை மீண்டும் கூடியதும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா மற்றும் இதர கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அமைதியை கடைபிடிக்க அவைத் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தியும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு இடையே கேள்வி நேரமும் நிறைவடைந்தது.

இன்று பேரணி

விலைவாசி உயர்வு மற்றும் யங் இந்தியன் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் இருந்து, குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி இன்று பேரணி செல்ல காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் இதேபோன்ற பேரணி நடத்த டெல்லி காவல் துறை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்