குரங்கு அம்மை பரவலை எவ்வாறு தடுப்பது? - மக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் குரங்கு அம்மை பரவலை தடுக்க மக்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுரைகளை வழங்கியுள்ளது.

வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோயான குரங்கு அம்மை பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.

இந்தியாவில் இதன் முதல் பாதிப்பு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடந்த ஜூலை 14-ம் தேதி கண்டறியப்பட்டது.

கேரளாவில் இதுவரை 5 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல் தலைநகர் டெல்லியில் 4 பேருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டதால் நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் ஆவர்.

இதற்கிடையில் கேரளாவில் குரங்கு அம்மை நோயாளி ஒருவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். குரங்கு அம்மைக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு இதுவாகும்.

இதையடுத்து நாட்டில் குரங்கு அம்மை நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்கவும் நோய் பரவலை எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதலை அளிக்கவும் பணிக்குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால், இக்குழுவுக்கு தலைமை வகிக்கிறார்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் உள்ள சீரம் தடுப்பூசி நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவாலா நேற்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமைச்சருடனான சந்திப்பு எப்போதும் போல் சிறப்பாக இருந்தது. குரங்கு அம்மைக்கான தடுப்பூசி குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். தடுப்பூசி தயாரிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன. இதுகுறித்து அமைச்சரிடம் விளக்கினேன்” என்றார்.

இந்நிலையில் குரங்கு அம்மை பரவலை தடுக்க மக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இதன்படி மக்கள் செய்ய வேண்டியவை வருமாறு:

குரங்கு அம்மை நோய்த் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் அவரை தனிமைப்படுத்த வேண்டும். சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். அல்லது ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.

நோயாளியை நெருங்கும்போது முகக்கவசம் அணிவதுடன் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய கையுறைகளை அணிய வேண்டும். சுற்றுப்புற பகுதியை கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

செய்யக் கூடாதவை வருமாறு: நோய்த் தொற்று ஏற்பட்டவரின் படுக்கை, போர்வை, துண்டு போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. நோயாளியின் உடைகளை மற்ற துணிகளுடன் சேர்த்து துவைக்க கூடாது. நோயின் அறிகுறி காணப்பட்ட உடனேயே பொது நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். நோயாளி, நோய் அறிகுறி உள்ளவர்களை களங்கப்படுத்தக் கூடாது. வதந்தி அல்லது தவறான தகவல்களை நம்பக்கூடாது.

அவசர நிலை பிரகடனம்

இந்நிலையில் குரங்கு அம்மை பரவலை தடுக்க அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. குரங்கு அம்மை தொடர்பாக அமெரிக்காவில் நியூயார்க், இல்லினாய்ஸ் மாநிலங்களை தொடர்ந்து அவசர நிலை பிரகடனம் செய்த மூன்றாவது மாநிலம் கலிபோர்னியா ஆகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE