எஸ்பிஐ உதவி பொது மேலாளரான தூய்மைப் பணியாளர் - கடின உழைப்பில் சாதனை படைத்த மகாராஷ்டிர பெண்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தேசிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) தூய்மைப் பணியாளர், 37 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கேயே உதவி பொது மேலாளராகி சாதனை படைத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் கடந்த 1964-ல் பிறந்தவர் பிரதிக் ஷா டோண்ட்வாக்கர். சதாஷிவ் கது என்பவருடன் இவருக்கு 16 வயதில் நடந்த திருமணம் காரணமாக தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார் பிரதிக் ஷா.மும்பை எஸ்பிஐ.யின் ஒரு கிளை அலுவலகத்தில் சதாஷிவ் அலுவலக உதவியாளராக இருந்துள்ளார். இவர்களுக்கு பிறந்த மகனுடன் சொந்த கிராமத்துக்கு அனைவரும் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் சதாஷிவ் திடீரென உயிரிழந்தார். இதனால், தனது 20 வயதில் இளம் விதவையான பிரதிக் ஷாவின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

பணியின்போது இறந்த தனது கணவரின் வேலை பிரதிக் ஷாவுக்கு கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அவர் 10-ம் வகுப்பு கூட தேர்ச்சிப் பெறாதவராக இருந்தார். அதனால், எஸ்பிஐ.யில் வேலை கிடைக்கவில்லை. இந்த சூழலில் கணவரின் நிவாரணத் தொகை பெற வங்கியின் மும்பை கிளைக்கு சென்றுள்ளார் பிரதிக் ஷா. அப்போது எஸ்பி பிராந்திய அலுவலர்கள் அளித்த ஆலோசனையின்படி, தூய்மைப் பணியாளராக எஸ்பிஐ.யில் இணைந்து பணியாற்ற தொடங்கினார்.

அத்துடன் தம் குடும்ப முன்னேற்றத்துக்காக தொடர்ந்து அவர் காட்டிய ஆர்வம், கடின உழைப்பின் மூலம் 37 ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து தற்போது மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார். ஆமாம்... பிரதிக் ஷா தற்போது அதே மும்பை எஸ்பிஐ பிராந்திய அலுவலகத்தில் உதவிப் பொது மேலாளராக பணியாற்றுகிறார்.

இதுகுறித்து பிரதிக் ஷா கூறியதாவது:

கணவரின் வேலையைப் பெற எனக்கு தகுதி இல்லாவிட்டாலும், எனக்கு கிடைத்த தூய்மைப் பணியாளர் பணியை தயங்காமல் ஏற்றுக் கொண்டேன். மேசை நாற்காலிகள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்ய நான் அப்போது பெற்ற மாத ஊதியம் வெறும் ரூ.65. எஸ்பிஐ.யில் தூய்மைப் பணி, வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டே தனியாக 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி பெற்றேன்.

பின்னர் மும்பை விக்ரோலி மாலை கல்லூரியில் உளவியலில் இளநிலை பட்டம் பெற்றேன். அந்த தகுதியை அங்கீகரித்து வங்கியில் எனக்கு எழுத்தர் பணி கிடைத்தது. அப்படியே, படிப்படியாக என்னை உதவி மேலாளராக உயர்த்தி விட்டது.

இவ்வாறு பிரதிக் ஷா கூறினார்.

இதற்கிடையே, அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய பிரோமத் டோண்ட்வாக்கர் பிரதிக்ஷா மீது அதிக அக்கறை காட்டியுள்ளார். பிரதிக் ஷா கல்வி பெறுவதிலும் பிரோமத் பல உதவிகள் செய்துள்ளார். இதனால், பிரோமத்தை 1993-ல் திருமணம் செய்து கொண்டார் பிரதிக் ஷா. கடந்த 2004-ல் எஸ்பிஐ.யின் பயிற்சி அலுவலராக சேர்ந்தவருக்கு 18 ஆண்டுகளுக்கு பின்னர் உதவி பொது மேலாளராக கடந்த ஜூன் மாதம் பதவி உயர்வு கிடைத்துள்ளது. தனது 39 ஆண்டு பணி காலத்துக்கு பின்னர் அடுத்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளார். எந்த நிலையிலும் விடா முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் உயரத்தை அடைய முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறார் பிரதிக் ஷா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE