குஜராத், ராஜஸ்தானியர் குறித்த சர்ச்சை கருத்து - மன்னிப்பு கோரினார் மகாராஷ்டிர ஆளுநர்

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பேசும்போது, “குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்களை மகாராஷ்டிராவில் இருந்து குறிப்பாக மும்பை மற்றும் தானே பகுதியிலிருந்து விரட்டியிருந்தால் இங்கு பணமே இருந்திருக்காது. நாட்டின் வர்த்தக தலைநகராக மும்பை இருந்திருக்க முடியாது. இவ்விரு மாநிலத்தவர்களும் எங்கு சென்றாலும், வர்த்தகம் செய்வதோடு, பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டி மக்கள் சேவை பணியிலும் ஈடுபடுகின்றனர்’’ என்றார்.

ஆளுநரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக சிவசேனா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கோஷ்யாரி தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில், குறிப்பிட்ட சமுதாய மக்கள் மும்பையின் முன்னேற்றத்துக்கு அளித்த பங்களிப்பை ஆளுநர் கோஷ்யாரி பாராட்டி பேசினார். அப்போது தவறுதலாக சில கருத்துகளை தெரிவித்திருக்கலாம். இதற்காக தன்னை மகாராஷ்டிர மக்கள் பெரிய மனதுடன் மன்னிப்பார்கள் என கோஷ்யாரி நம்புவதாக கூறியுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE