“பாஜகவுடன் போட்டியிடும் அளவிற்கு எந்த தேசிய கட்சிக்கும் வலுவில்லை” - ஜே.பி.நட்டா

By செய்திப்பிரிவு

பாட்னா: “தற்போதைய நிலையில் பாஜக ஒன்றுதான் இந்தியாவின் ஒரே தேசிய கட்சி. அதனுடன் போட்டியிடும் அளவிற்கு மற்ற கட்சிகளுக்கு வலுவில்லை” என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் நடந்த பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜே.பி.நட்டா கூறியது: “காங்கிரஸ் கட்சி சகோதரன் மற்றும் சகோதரியின் கட்சியாக மாறிவிட்டது. மாநிலக் கட்சிகளான பிஹாரில் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா, ஒடிசாவைச் சேர்ந்த பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், டிஆர்எஸ் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள குடும்பக் கட்சிகளின் அரசியல் முடிந்து விட்டது அல்லது முடியும் தருவாயில் உள்ளது.

பாஜக மட்டுமே அரசியல் தொடபுடைய கட்சியாகவும், கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கட்சியாகவும் உள்ளது. சகோதர, சகோதரி கட்சி உள்ளிட்ட அனைத்து குடும்ப அரசியல் கட்சிகளும் அரசியல் விரைவில் முடிவடைந்து விடும். நாட்டின் அனைத்து மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது. எந்த ஒரு தேசிய கட்சிக்கும் பாஜகவை எதிர்த்து நிற்கும் வலு இல்லை” என்று நட்டா பேசினார்.

இந்த இரண்டு நாள் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில், வரும் 2024-ம் ஆண்டுத் தேர்தலை பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. பிஹாரைப் பொறுத்த வரையிலும், 2024 மக்களவைத் தேர்தலிலும், அடுத்துவரும் 2025-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியில் தொடர்வது என்று அறிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE