ரூ.5,200 கோடி மதிப்பில் பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் - சோலார் பேனல் தொடர்பான இணையதளமும் அறிமுகம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசின் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.5,200 கோடி மதிப்பிலான பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், மின் துறையின் செயல்பாடுகளையும் நிதி நிலைமையையும் மேம்படுத்தும் நோக்கில் ‘புதுப்பிக்கப்பட்ட விநியோக துறை திட்ட’த்தை அவர் தொடங்கி வைத்தார். இந்தத்திட்டத்தின் கீழ், மின் துறையை நவீனப்படுத்தவும், அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் 2025-26 நிதி ஆண்டு வரை ரூ.3 லட்சம் கோடி செலவிடப்பட உள்ளது.

பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகான கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் மின்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்துக்காட்டும் விதமாக ‘ஒளிமயமான இந்தியா, பிரகாசமான எதிர்காலம் @2047’ என்ற நிகழ்ச்சி ஜூலை 25-ல் தொடங்கியது. நேற்றோடு இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக பல்வேறு பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தெலங்கானாவில் 100 மெகாவாட், ராமகுண்டம் மிதக்கும் சோலார் திட்டம், கேரளாவில் 92 மெகாவாட் காயம்குளம் மிதக்கும் சோலார் திட்டம், ராஜஸ்தானில் 735 மெகாவாட் சோலார் திட்டம், லேயில் பசுமை ஹைட்ரஜன் மொபிலிட்டி திட்டம், குஜராத்தில் இயற்கை எரிவாயுடன் ஹைட்ரஜனை சேர்க்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.5,200 கோடிஆகும். மேலும், மேற்கூரையில் சோலார் பேனல் அமைப்பது தொடர்பான இணையதளத்தையும் அவர் அறிமுகம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய மின் துறையின் போக்கு குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். ‘கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் மின்துறை மிகப்பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தற்போது இந்தியா மின் உபரி நாடு மட்டுமில்லை. மின் ஏற்றுமதி நாடும் கூட.சோலர் கட்டமைப்பில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மின் துறையை மேம்படுத்தும் திட்டங்களை மத்திய அரசு முழு வீச்சுடன் செயல்படுத்தி வருகிறது’ என்று அவர் கூறினார்.

மின் நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் செலுத்த வேண்டிய ரூ.2.5 லட்சம் கோடி கடன் பாக்கியை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மின் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியத் தொகையை இன்னும் மாநில அரசுகள் வழங்காமல் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE