ஆந்திராவில் கடலில் அடித்து செல்லப்பட்ட 6 பொறியியல் மாணவர்கள் சடலமாக மீட்பு

By செய்திப்பிரிவு

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், அனகாபல்லியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், 2-ம் ஆண்டு படித்து வந்த 15 நண்பர்கள், நேற்று முன்தினம் தேர்வுகள் முடிவடைந்ததால், சீதபாளையம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றனர்.

அப்போது, இவர்களில் 7 பேர் உற்சாக மிகுதியால் கடலில் குளிக்கச் சென்றனர். திடீரென ஒரு ராட்சத அலை இவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. தங்களை காப்பாற்றும்படி அந்த 7 பேரும் கதறினர். இதைக் கேட்ட அப்பகுதி மீனவர்கள் ஓடிச் சென்று, தேஜா (19) எனும் மாணவரை மட்டும் காப்பாற்றினர். இவர் தற்போது விசாகப்பட்டினம் கேஜிஎச் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 6 மாணவர்களும் கடலில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் இறங்கினர்.

கடற்படை ஹெலிகாப்டர் மூலம் கடலில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணி மும்முரமாக நடந்தது. மேலும் 4 படகுகளில் மீட்பு குழுவினர், கடற்படை போலீஸார் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சூர்யகுமார் (19) எனும் மாணவரின் சடலம் கரை ஒதுங்கியது. இதனை கண்டு அவரின் பெற்றோர், நண்பர்கள் கதறி அழுதனர். கடல் பகுதியில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், நேற்று மீதமுள்ள 5 மாணவர்களின் உடல்களும் கண்டறியப்பட்டு, படகுகள் மூலம் மீட்கப்பட்டன. மாணவர்களின் உடலை கண்டு சக மாணவர்கள், பெற்றோர், உறவினர் கதறி அழுதனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE