அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் 676 மாவட்ட சட்டப் பணிகள் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆணையங்களின் தலைவராக அந்தந்த மாவட்ட நீதிபதிகள் செயல்படுகின்றனர்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தேசிய அளவிலான முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றியானார். அவர் பேசியதாவது:

நாடு விடுதலை அடைந்து 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகளில் நமது நாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, தொழில் நடத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது, அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்வது ஆகியவை அத்தியாவசியமாகும்.

நீதித் துறையின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் நீதிமன்றங்களை எளிதில் அணுக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கடந்த 8 ஆண்டுகளில் நீதித் துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

நீதித் துறையில் தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டியது அவசியம். மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மெய்நிகர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து விதிமீறல் போன்ற குற்றங்களுக்காக 24 மணி நேர நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கி உள்ளன. மக்களின் வசதிக்காக நீதிமன்றங்களில் காணொலி வசதி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட நீதிமன்றங்களில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான வழக்குகளும், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 லட்சம் வழக்குகளும் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து நீதிமன்றங்களும் காணொலி மூலம் விசாரணை நடத்தி மக்களுக்கு நீதி வழங்கின. 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் நீதித் துறை மாறி வருகிறது.

சட்ட விதிகள் குறித்தும், சட்ட தீர்வுகள் குறித்தும் அனைத்து தரப்பு மக்களும் அறிந்திருக்க வேண்டும். இதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இதன் ஒருபகுதியாக செல்போன் மற்றும் செயலிகள் மூலம் சாமானிய மக்களும் சட்ட சேவைகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் பல்வேறு சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகள் தொடர்பான மனிதாபிமான பிரச்சினையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்கும் பொறுப்பை மாவட்ட சட்டப் பணிகள்ஆணையங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். விசாரணை கைதிகளை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் விடுதலையில் மாவட்ட நீதிபதிகள் கவனம் செலுத்த வேண்டுகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE