“மகாராஷ்டிர ஆளுநரின் கருத்து துரதிர்ஷ்டவசமானது; எதிர்பாராதது அல்ல” - மார்கரெட் ஆல்வா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியின் துரதிர்ஷ்டவசமானது, ஆனால் எதிர்பார்க்காதது இல்லை” என்று எதிர்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மார்கரெட் ஆல்வா, தனது போட்டி வேட்பாளரான மேற்கு வங்க கவர்னர் ஜெக்தீப் தன்வரையும் தாக்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மகாராஷ்டிர ஆளுநரின் கருத்து துரதிர்ஷ்டவசமானதுதான்; ஆனால் எதிர்பாராதது இல்லை. குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரான, முன்னாள் மேற்கு வங்க ஆளுநரிடமிருந்து அவர் பெற்ற செய்தியான சர்ச்சை, முட்டாள்தனமான கருத்துகள், அரசியலமைப்பை மீறிய அதிகாரம் உள்ளதாக செயல்படுவது போன்ற செயல்களின் வெகுமதி இது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மும்பை அந்தேரியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்ட மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பேசுகையில் "மகாராஷ்டிராவில் குஜராத்தி, ராஜஸ்தானிகள் மட்டும் இல்லாவிட்டால் பணமே இருக்காது. அதுவும் குறிப்பாக மும்பை, தானேவில் பணமே இருக்காது. மும்பை இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக இருக்காது" என்று தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்கட்சிகளின் தாக்குதலுக்கு பின்னர் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆளுநர் கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து என்றும், தான் அவற்றை ஆதரக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தன்வர், மேற்கு வங்கத்தில் கவர்னராக இருக்கும்போது ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசின் மம்தா பானர்ஜிக்கும் நிர்வாகம், அரசியல் விவகாரங்களில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இதனால் அக்கட்சியினர், மத்திய அரசின் தூண்டுதலால் ஆளுநர் மாநில அரசின் விஷயங்களில் அடிக்கடி தலையிடுவதாக குற்றம்சாட்டினர் என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE