கொல்கத்தா: மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் விவகாரத்தில், கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதாவின் 4 சொகுசு கார்கள், பணம் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை தேடும் பணி நடக்கிறது.
மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் மற்றும் ஊழியர் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேற்கு வங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, சட்டவிரோத ஆசிரியர் மற்றும் ஊழியர் நியமனத்தில் பெற்ற லஞ்சப் பணத்தை தனக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் கட்டுக்கட்டாக குவித்து வைத்துள்ளார்.
நடிகை அர்பிதாவுக்கு சொந்தமான 2 வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.50 கோடி ரொக்கம், 5 கிலோ தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவரது 3,4-வது வீடுகளிலும் சோதனை நடந்தது. 3-வது வீட்டில் எதுவும் சிக்கவில்லை.
இந்நிலையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் நடிகை அர்பிதாவின் சொகுசு கார்கள் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆடி ஏ4, ஹோண்டா சிட்டி, ஹோண்டா சிஆர்வி மற்றும் மெர்சிடெஸ் பென்ஸ் என 4 சொகுசு கார்களை நடிகை அர்பிதா முகர்ஜி வைத்துள்ளார். அமலாக்கத்துறையினர் நடிகை அர்பிதாவை கைது செய்தபோது, அவரது வெள்ளை நிற பென்ஸ் கார் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. மற்ற கார்களை தேடும் பணி நடக்கிறது.
» மேற்குவங்க ஆசிரியர் நியமனத்தில் நடந்தது என்ன?
» குடியரசுத் தலைவர் குறித்து சர்ச்சை கருத்து: கடிதம் மூலம் மன்னிப்பு கோரினார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
வங்கி கணக்கில் ரூ.2.2 கோடி
நடிகை அர்பிதா முகர்ஜியின் 3 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். இதில் ரூ. 2.2 கோடி அளவுக்கு பணம் உள்ளது. இவர் 3 நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார். பார்த்தா சட்டர்ஜியுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, இந்த நிறுவனங்களின் இயக்குநராக நடிகை அர்பிதா நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை அர்பிதாவின் வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த சோதனையில் கருப்பு டைரி ஒன்று மீட்கப்பட்டது. இதில் ஆசிரியர் நியமனத்தில், சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களிடம் பெறப்பட்ட லஞ்சப் பண பரிமாற்ற விவரங்கள் உள்ளன.
மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பு
கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சட்டர்ஜி மற்றும் நடிகை அர்பிதா முகர்ஜியின் காவலை கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. அவர்களிடம் 2 நாளைக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜரான இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவ பரிசோதனைக்கு வர மறுத்து, நடிகை அர்பிதா காரில் அமர்ந்து அழத் தொடங்கினார். அவரை பெண் போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்தனர். அவர் காருக்கு கீழே தரையில் அமர்ந்து அழத் தொடங்கினார்.
பின்னர் சற்கர நாற்காலியில் அமர வைத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் அழுதபடியே மருத்துவமனைக்கு சென்றார். பார்த்தா சட்டர்ஜியும் சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு சென்றார். ‘சதித் திட்டம் தீட்டி என்னை சிக்கவைத்துள்ளனர்’ என அவர் பேட்டியளித்தார்.
பிரதமரை சந்தித்து பேச மம்தா திட்டம்
மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் அந்த மாநில முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி சிக்கியுள்ளார். அவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதாவின் வீடுகளில் இருந்து இதுவரை ரூ.50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழல் வழக்கில் பார்த்தா சட்டர்ஜிக்கு மட்டுமன்றி முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில் டெல்லியில் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் முதல்வர் மம்தா பங்கேற்கிறார். இதற்காக 4-ம் தேதியே டெல்லி செல்லும் அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடியை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டு காணொலி வாயிலாக நடைபெற்ற நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தை மம்தா புறக்கணித்தார். இந்த ஆண்டு அவரே நேரடியாக கூட்டத்தில் பங்கேற்கிறார். அவரது டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்ட பிறகு நாடாளுமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் மிதவாத போக்கை கடைபிடிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago