கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்: பார்த்தா சாட்டர்ஜி குறித்து திரிணமூல் செய்தித் தொடர்பாளர் கருத்து

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார் என்று பார்த்தா சாட்டார்ஜி குறித்து திரிணமூல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், மாநிலத் தலைநகர் கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோர் கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் 3 நாட்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது.

மேலும் ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.29 கோடி ரொக்கப் பணமும், 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.50 கோடி ரொக்கப் பணமும், 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பார்த்தா சாட்டர்ஜி கட்சிக்கும் கட்சியைச் சேர்ந்த அனைவருக்குமே அவமானம் ஏற்படுத்திவிட்டார் என்று திரிணமூல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக குணால் கோஷ், "கட்சியின் தேசிய பொதுச் செயலாளர், அமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி கைதாகியுள்ளார். அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அவரால் கட்சிக்கும் எங்களுக்கும் அவமானம் ஏற்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு அவருக்கே உள்ளது. நான் ஏன் அமைச்சர் பதவியை துறக்க வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் அவர் ஏன் தான் குற்றமற்றவர் என நிரூபிக்கும் வகையில் பொதுவெளியில் பேசவில்லை" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பார்த்தா சாட்டர்ஜி அனைத்துப் பதவிகளிலும் இருந்தும் நீக்கப்படும். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கூட விலக்கப்பட வேண்டும். எனது அறிக்கை தவறு என நினைத்தால் என்னை நீக்கலாம். நான் கட்சியின் பாதுகாவலனாக தொண்டாற்றுவேன் என்று குணால் கோஷ் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE