நிதி மோசடி வழக்குகளில் கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது - உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்புதல் மற்றும் கைது செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் சம்மன், கைது, பறிமுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது:

நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு உள்ள கைது, பறிமுதல், ஜாமீன் அளிக்கும் அதிகாரங்கள் எல்லாம் குற்றவியல் நடைமுறை சட்ட விதிமுறை வரம்புக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன. இந்த விசாரணை அமைப்புகள், காவல்துறை அதிகாரத்தை பயன்படுத்துகின்றன. இவர்கள் விசாரணை நடத்தும் போது குற்றவியல் நடைமுறை சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அமலாக்கத்துறை, காவல்துறை இல்லை என்பதால், விசாரணையின் போது அமலாக்கத் துறையினரிடம் குற்றவாளி தெரிவிக்கும் வாக்குமூலம், நீதி விசாரணையில் குற்றவாளிக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.

இது குற்றவாளியின் சட்ட உரிமைகளுக்கு எதிரானது. அமலாக்கத் துறையின் விசாரணை, சம்மன், வாக்குமூலம் பதிவு, சொத்துக்கள் பறிமுதல் ஆகியவை தனிநபரின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளன. நிதிமோசடி தடுப்பு சட்டத்தின் விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். ஜாமீனுக்கான நிபந்தனைகள் மிகவும் கடுமையாக உள்ளன. இவ்வாறு புகார் மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது:

அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் கைது, பறிமுதல் மற்றும் சோதனை நடவடிக்கைக்காக நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் உள்ள 5, 8(4), 15,17, மற்றும் 19 ஆகிய பிரிவுகள் அரசியலமைப்பு படி செல்லுபடியானதுதான். பிஎம்எல்ஏ சட்டத்தின் 45வது பிரிவில் உள்ள ஜாமீனுக்கான 2 நிபந்தனைகளும் சரியானதுதான். அமலாக்கத்துறை இயக்குநரகம், தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (எஸ்எப்ஐஓ) மற்றும் வருவாய் புலனாய்வு இயக்கு நரகம் (டிஆர்ஐ) போன்ற விசாரணை அமைப்புகள் காவல்துறையை சேர்ந்தவை அல்ல. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் அல்ல. அதனால் விசாரணையின் போது, அந்த அமைப்புகளால் பதிவு செய்யப்படும் வாக்குமூலங்கள் செல்லுபடியான ஆதாரங்கள் ஆகும்.

காரணம் அவசியமல்ல

நிதி மோசடி வழக்கில் குற்றவாளியை கைது செய்யும் நேரத்தில் அதற்கான காரணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிப்பது அவசியம் அல்ல. அதேபோல் குற்றவாளிக்கு புகார் நகல் (இசிஐஆர்) கொடுக்க வேண்டிய அவசியம் அல்ல. நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நிதி மோசடி குற்றச் செயல் ஆகும். புகார் நகல் (இசிஐஆர்) எப்.ஐ.ஆர்-க்கு நிகரானது அல்ல. நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமீனுக்கான இரண்டு விதிமுறைகளும் சட்டப்படியானதுதான். தன்னிச்சையானது அல்ல. நிதி மோசடி தடுப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சில திருத்தங்கள் நிதி மசோதாவாகநிறைவேற்ற முடியுமா என்பதை 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE