“நீங்கள் தான் மோடி ஜி, நீங்கள் தினமும் டிவியில் வருவீர்கள்” - பிரதமரை சிரிக்க வைத்த 5 வயது சிறுமி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் அலுவலகத்தில் அவருக்கும் ஐந்து வயது சிறுமிக்கும் இடையே நடந்த உரையாடல் கவனம் பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் தொகுதியின் பாஜக எம்பி அனில் ஃபிரோஜியாவின் குடும்பத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இப்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. காரணம், எம்பி அனில் ஃபிரோஜியாவின் 5 வயது மகள் அஹானா. பிரதமருக்கும் அஹானாவுக்கும் இடையே நடந்த வேடிக்கையான உரையாடலே சந்திப்பு பேசப்படுவதற்கு காரணம்.

சந்திப்பின்போது ஐந்து வயதான அஹானாவிடம் "நான் யார் தெரியுமா?" என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கும் சிறுமி அஹானா, "தெரியும். நீங்கள் தான் மோடி ஜி. நீங்கள் தான் தினமும் டிவியில் வருவீர்கள்" என்று பதில் கொடுத்துள்ளார். இந்தப் பதிலை கேட்டு புன்னகைத்த பிரதமர் மோடி, "நான் என்ன செய்கிறேன் என்று உனக்குத் தெரியுமா?" என்று மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு, "நீங்கள் மக்களவையில் வேலை செய்கிறீர்கள்" என்று சிறுமி அஹானா பதிலளிக்க அந்த அறையில் இருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். பிரதமரும் சிரித்துக்கொண்டே சிறுமி அஹானாவுக்கு சாக்லேட்டுகளை பரிசாக கொடுத்துள்ளார். பிரதமர் சந்திப்பு உடனான புகைப்படங்களை அனில் ஃபிரோஜியா தனது வலைதளங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE