பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக இளைஞரணி செயலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் பரவலாக பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வலுத்துள்ளது. சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
படுகொலை - நடந்தது என்ன? - கர்நாடகாவில் பாஜக இளைஞரணி செயலாளர் ஒருவர் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னட மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டாரு. இவர் பாஜக மாவட்ட இளைஞரணி (யுவ மோர்சா) செயலாளராக உள்ளார். பெல்லாரி அருகே இவர் கோழி இறைச்சிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்றிரவு இவர் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பைக்கில் வந்த அடையாளம் தெரியாத சிலர் அரிவாள் கொண்டு வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கட்சிக்குள் சலசலப்பு: இந்நிலையில், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் வலுத்துள்ளது. கட்சிக்காரரின் உயிரைப் பாதுகாக்க பாஜக ஆளும் மாநில அரசு தவறிவிட்டதாகக் கூறி கர்நாடக பாஜகவிலிருந்து விலகுவதாகக் கூறி கூட்டம் கூட்டமாக கட்சியினர் ராஜிநாமா கடிதங்களை கொடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்க, மாநில பாஜக தலைவர் நலின் குமார் கட்டீலின் காரை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்கள், அவரது காரை சேதப்படுத்தி அதை தீக்கிரையாக்கினர்.
» சோனியா காந்தி ஒத்துழைப்பு: விசாரணை இன்றுடன் நிறைவுபெறலாம்; அமலாக்கத் துறை வட்டாரம் தகவல்
» தாய் இறந்த நிலையில் தந்தையால் கைவிடப்பட்ட பிஹார் சிறுமி - 99.4% மதிப்பெண் பெற்று சாதனை
6 தனிப்படைகள் அமைப்பு: பிரவீன் நெட்டாரு படுகொலை தொடர்பாக காவல்துறை 6 தனிப்படைகளை அமைத்துள்ளது. இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மடிக்கேரி, கேரல், ஹசன் மாவட்டங்களுக்கு போலீஸ் தனிப்படைகள் விரைந்துள்ளன. இது மட்டுமல்லாமல் பெல்லாரி, சூலிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்துள்ளது. விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் இன்று காலையிலேயே இப்பகுதியில் பந்த் நடத்த அழைப்பு விடுத்தனர். இந்தப் படுகொலைக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகள் தான் காரணம் என்று கூறி வலது சாரி அமைப்பினர் படுகொலையான நெட்டாருவின் வீட்டருகே திரண்டு நீதி கோரி முழக்கமிடனர்.
கூட்டம் கூட தடை: பாஜக இளைஞரணி மாநிலச் செயலாளர் கொலையைத் தொடர்ந்து பதற்றம் நிறைந்த பகுதிகளில் மக்கள் பெரியளவில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தலைவர் ருஷிகேஷ் சோனானே தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை தேடி வருவதாகவும், அந்தக் காட்சியில் கேரள பதிவெண் கொண்ட ஒரு பைக்கில் மூன்று பேர் வருவதும் பதிவாகியுள்ளதாகக் கூறினார்.
இந்நிலையில், மங்களூரு காவல் ஆணையர் ராஜேந்திரா கூறுகையில், "இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். உயிரிழந்த பிரவீன் நெட்டாருவின் குடும்பத்தினரிடம் உடல்கூறாய்வு செய்ய அனுமதிக்க வேண்டியுள்ளோம். மேலும், இறுதிச் சடங்கை நடத்துவது தொடர்பாகவும் பேசியுள்ளோம்" என்றார். முதல்வர் பசவராஜ் பொம்மை நடந்த சம்பவத்தை மிகக் கடுமையாக கண்டித்துள்ளார். இவ்விவகாரத்தில் துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் சட்டட்துக்கு உட்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், "சம்பவ இடம் கேரள மாநில எல்லைக்கு அருகில் உள்ளது. அதனால், கேரள போலீஸாரின் உதவியையும் நாடியுள்ளோம். விசாரணை நடைபெறுகிறது. இளைஞர் ஒருவரை இழந்துள்ளது ஆவேசத்தைத் தரும்தான். ஆனால் கட்சியினர் பொறுமை காக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். உடுப்பி, தக்சின கன்னடா மாவட்டங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடைகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் சில முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago