‘சமத்துவ கிராமங்கள்’ அமைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை: மக்களவையில் அமைச்சர் தகவல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: 'சமத்துவக் கிராமங்கள்' அமைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய ஊரக வளச்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வீ நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். இதனை அவர் செவ்வாய்க்கிழமை மக்களவையில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் எழுப்பியக் கேள்விக்கானப் பதிலில் தெரிவித்தார்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதி எம்.பி.யான ரவிக்குமார் மக்களவையில் எழுப்பிய கேள்வியில், ‘தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்ட "சமத்துவ கிராமங்கள்" உருவாக்கி அனைத்து சாதியினரும் சேர்ந்து வாழும் வசதிகளை வழங்கியுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் (PMAY) கீழ் அவ்வாறு சமத்துவ கிராமங்களை அமைக்கும் திட்டம் ஏதேனும் இந்திய ஒன்றிய அரசிடம் உள்ளதா?’ எனக் கேட்டிருந்தார்.

இதற்கு ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்து மூலம் அளித்த பதில்: ’அனைவருக்கும் வீடு’ என்ற இலக்கை அடைவதற்காக, கிராமப்புறங்களில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் 2.95 கோடி வீடுகளைக் கட்டுவதற்கான ஒட்டுமொத்தமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள், சமூகப் பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு (SECC) 2011-ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட வீட்டு வசதி இல்லாதது தொடர்பான அளவுகோல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்படுகிறார்கள்.

இந்த அளவுகோல்கள் அல்லது அளவுகள் SECC 2011 மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் கணக்கெடுப்பு தரவுத்தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன. கிராம சபை மற்றும் அதற்கு மேலே உள்ள அமைப்பால் உரியவகையில் பின்னர் அவை சரிபார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் சாதி பாகுபாடின்றி வீடுகள் வழங்கப்படுகின்றன. ’சமத்துவ கிராமங்கள்’ அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. உண்மையில், இரண்டு அறைகள் வரையிலான கச்சா வீடுகளைக் கொண்ட அனைத்துக் குடும்பங்களும் சாதிப் பாகுபாடுகளைப் பொருட்படுத்தாமல் இந்தத் திட்டத்தில் பரிசீலிக்கப்படுகின்றன.

அந்த வீடுகளில் அடிப்படை வசதிகள், கழிவறைகள், மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்புகள் ஆகியவை தற்போதைய திட்டங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் செய்து தரப்படுகின்றன. ஏற்கெனவே வறுமை ஒழிப்பு, ஊதிய வேலைவாய்ப்பு, கிராமப்புற உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் சமமான வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு. இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

கையகப்படுத்தப்பட்ட பழங்குடி வனநிலம் விவரம் அரசிடம் இல்லை

எம்.பி. ரவிக்குமார் பழங்குடினர் வனநிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக எழுப்பிய மற்றொரு கேள்வியில், ’மாநில வாரியாக கடந்த 10 ஆண்டுகளில் அரசால் கையகப்படுத்தப்பட்ட பழங்குடியின வனநிலம் பற்றிய (பகுதி வாரியாக) விவரங்கள் அரசிடம் உள்ளதா?

கடந்த 5 ஆண்டுகளில் கையகப்படுத்திய பழங்குடியினர் நிலத்துக்கு மாற்றாக அரசால் மறுபங்கீடு செய்யப்பட்ட நிலங்களின் விவரங்கள் உள்ளதா? பழங்குடியினரின் நிலங்களை கையகப்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா?’ எனக் கேட்டிருந்தார்.

இதற்கு பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஷ்வேஷ்வர் துடு அளித்துள்ள பதில்: பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வனஉரிமைகள் அங்கீகாரம்) சட்டம் 2006 (FRA, 2006) கீழ், வன நிலத்திற்கான பட்டாக்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களால் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

வனத்தில் வசிக்கும் எந்தவொரு பட்டியல் பழங்குடியினரும் அல்லது பிற பாரம்பரிய வனவாசிகளும் அங்கீகாரம் மற்றும் சரிபார்ப்பு செய்யப்படும் வரை அவரது ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள வன நிலத்திலிருந்து வெளியேற்றப்படவோ அகற்றப்படவோ கூடாது என FRA, 2006 -ன் பிரிவு 4 (5) பாதுகாப்பை வழங்குகிறது.

இந்த சட்டத்தில் மேலும், 'நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம், 2013 -ல் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமையின் பிரிவு 3 (r)(ii)-ன் கீழ், 'நில உரிமையாளர்' என்பது FRA,2006 (2 of 2007)- ன் கீழ் அல்லது தற்போதைக்கு நடைமுறையில் உள்ள வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் வனஉரிமைகள் வழங்கப்பட்டுள்ள எவரையும் உள்ளடக்கும்' எனக் கூறியுள்ளது.

இருப்பினும், நிலமும் அதன் நிர்வாகமும் இந்திய அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் பிரத்தியேக சட்டம் இயற்றும் மற்றும் நிர்வாக அதிகார வரம்பிற்குள் வருவதால் [ஏழாவது அட்டவணை- பட்டியல் ii (மாநிலப் பட்டியல்) - நுழைவு எண். (18)], நிலம் கையகப்படுத்துதல் பற்றிய தரவுகள் இந்திய ஒன்றிய அரசால் பராமரிக்கப்படுவதில்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’இணையத்திடம் விழுப்புரம் தொகுதி எம்பியான டி.ரவிக்குமார் கருத்து கூறும்போது, ‘இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பழங்குடியினரின் நிலங்கள், நிலக்கரி சுரங்கங்களுக்காகவும், பெருநிறுவனகளுக்காகவும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு அந்த மக்கள் நிலம் அற்றவர்களாக்கப்படுகின்றனர்.

இதன்மூலம், வனஉரிமைச் சட்டம் வழங்கும் பாதுகாப்பு நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது. இந்த உண்மைகளைச் சொல்லாமல் அமைச்சர் அரசாங்கத்தைக் காப்பாற்றும் விதமாக எதையோ சொல்லி சமாளிக்க முயற்சி செய்திருக்கிறார். பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற நாளிலேயே இப்படி நழுவலாக பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

பழங்குடி சமூகத்தை சேர்ந்தவராக பதவி ஏற்றுள்ள புதிய குடியரசுத் தலைவரின் பதவிக் காலத்திலாவது பழங்குடியின மக்களின் நிலங்களும் வன உரிமைகளும் பாதுகாக்கப்படுமா? என்ற கேள்வி எழுகிறது’ எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

43 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்