ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஆடிக் கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் முருகப் பெருமானின் அருள் கிடைக்கட்டும்” என்று அவர் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு ஆடிக் கிருத்திகை மிகவும் விசேஷமான தினமாகும். எல்லா மாதங்களிலும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், தை கிருத்திகை மற்றும் ஆடிக் கிருத்திகை தனிச் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகை தினம் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணிகை, பழமுதிர்ச் சோலையில் உள்ள கோயில்களில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள முருகப் பெருமான் கோயில்களில் நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசித்திப் பெற்ற கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மற்ற கோயில்களில் உள்ள முருகப் பெருமான் சந்நிதிகளிலும், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன.

இதேபோல, தமிழகத்திலும் நேற்று ஆடிக் கிருத்திகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முருகன் கோயில்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் காவடி ஏந்தி வந்தும், மொட்டை போட்டுக் கொண்டும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இந்நிலையில், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “ஆடிக் கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல் வாழ்த்துகள். முருகப் பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க முருகன் அருள் புரியட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE