பள்ளி ஆசிரியர் நியமனங்களில் முறைகேடு - மே.வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, நடிகை கைது

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி (70), அவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டில் மேற்கு வங்க கல்வித் துறையில் 13,000 ஆசிரியர்கள், ஊழியர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணி நியமனத்தில் சில ஆயிரம் பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

அப்போதைய கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியிடம் கடந்த ஏப்ரல் 25, மே 18-ம் தேதிகளில் சிபிஐ பல மணி நேரம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் பெருமளவில் பணப் பரிமாற்ற மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியது.

கொல்கத்தாவில் உள்ள அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் வீடு, அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள் என 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது அமைச்சருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதோடு ரூ.54 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், ரூ.79 லட்சம் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி நேற்று கைது செய்யப்பட்டார். முதல்வர் மம்தா அரசில் 2-ம் இடத்தில் உள்ள அவர் தற்போது வர்த்தகம், தொழில் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். கொல்கத்தா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து நெஞ்சு வலிப்பதாக அமைச்சர் பார்த்தா கூறினார். அவர் கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் கொல்கத்தாவில் பல்வேறு வீடுகள், சொத்துகளை அவர் வாங்கியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டில் தமிழில் ‘சின்னம்மா லவ்' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை. வங்க, ஒடியா மொழி திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

மம்தாவுக்கு தொடர்பு?

பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘இப்போது சிக்கியிருக்கும் பணம், வெறும் முன்னோட்டம்தான், முழுதிரைப்படமும் விரைவில் வெளியாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா கூறும்போது, ‘‘அமைச்சர் சாட்டர்ஜி மட்டுமல்ல, முதல்வர் மம்தாவுக்கும் ஊழலில் தொடர்பு உள்ளது. அவரையும் கைது செய்ய வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE