“கனத்த இதயத்துடன் ஷிண்டேவை முதல்வராக்க முடிவு செய்தோம்” - மகாராஷ்டிரா பாஜக தலைவர் பேச்சு

By செய்திப்பிரிவு

மும்பை: கனத்த இதயத்துடன் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வர் ஆக்க முடிவு செய்தோம் என மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் பேசியுள்ளார்.

மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 39 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து கடந்த மாதம் 30-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார்.

பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றார். பா.ஜ.க எம்எல்.ஏ ராகுல் நர்வேகர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், 164 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றார்.

இதனிடையே, மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தேவேந்திர ஃபட்னாவிஸுக்குப் பதிலாக ஏக்நாத் ஷிண்டே முதல்வராக வேண்டும் என்ற முடிவை கனத்த இதயத்துடன் பாஜக முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். மாநில பாஜகவின் செயற்குழு கூட்டத்தில் பேசியபோது இதை தெரிவித்தார்.

கூட்டத்தில், "சரியான செய்தியை தெரிவிக்கும் பொருட்டும், ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு தலைவரை நாங்கள் வழங்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருந்தது. பாஜக மத்திய தலைமையும் பட்னாவிஸும் கனத்த இதயத்துடன் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வர் ஆக்க முடிவு செய்தனர். இந்த முடிவு எங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை. என்றாலும், அதை ஏற்க முடிவு செய்தோம்." என்று சந்திரகாந்த் பாட்டீல் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE