கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கும் திட்டம் இல்லை - மத்திய அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது மக்களவை உறுப்பினர் அருண் குமார் சாகர் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணைஅமைச்சர் அஜய் பட் எழுத்து மூலம் அளித்த பதில்:

ராணுவத்தில் இளைஞர்கள் கட்டாயமாக சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற எந்த திட்டத்தையும் மத்திய அரசு உருவாக்கவில்லை. மேலும் அக்னிபாதைத் திட்டத்தை அமல்படுத்துவதில் சைனிக் பள்ளிகளுக்கு எந்த பங்கும் இல்லை.

அரசு சாரா அமைப்புகள், தனியார் பள்ளிகள் மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் பங்குதாரர் அடிப்படையில் 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பிரதேசதம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

மக்களவையில் பொள்ளாச்சி திமுக எம்.பி. கே. சண்முகசுந்தரம் எழுப்பிய கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் எழுத்து மூலம் அளித்த பதில்:

தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை காரிடார் (டிஎன்டிஐசி) திட்டத்துக்காக தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி ஆணையம் (டிட்கோ) ரூ.11,359 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 42 தொழில் நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அன்டார்டிகா மசோதா

மக்களவையில் நேற்று இந்திய அன்டார்டிகா மசோதா நிறைவேற்றப்பட்டது. அண்டார்டிகா கண்டத்தின் சுற்றுச்சூழலையும் அதன் சார்ந்த மற்றும் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்பையும் பாதுகாத்தல் தொடர்பாக அந்த கண்டத்தின் 2 பகுதிகளில் ஆராய்ச்சி நிலையங்களை அமைக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE