உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களை கல்லூரியில் அனுமதிக்கும் திட்டம் இல்லை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்திய கல்லூரிகளில் சேர்க்க தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனுமதி அளிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மற்றும் சீனாவில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் சுமார் 40 ஆயிரம் பேர், போர் மற்றும் கரோனா பரவல் காரணமாக நாடு திரும்பியுள்ளனர். இந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்வது தொடர்பான கேள்விக்கு மத்திய சுகாதார இணை அமைச்சர் பாரதி ப்ரவீன் பவார் நேற்று மக்களவையில் எழுத்து மூலம் பதில் அளித்தார்.

அமைச்சர் தனது பதிலில், “வெளிநாடுகளில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்வது அல்லது மாற்றுவது தொடர்பாக 1956-ம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் மற்றும் 2019-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் எந்த விதிகளும் இல்லை. எனவே இம்மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க இந்திய மருத்துவ ஆணையம் அனுமதி அளிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

உக்ரைனில் இருந்து திரும்பிய 400-க்கும் மேற்பட்ட மாணவர்களை மேற்கு வங்க மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில அரசு அனுமதித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு, “தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளபடி, இது தொடர்பாக எந்த தகவலும் அதனிடம் இல்லை” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE