கேரள தங்கக் கடத்தல் வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றவேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு வழக்கு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு வந்த பார்சலில் அதிக தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை, சுங்கத் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த தங்கக் கடத்தல். வழக்கை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கை அந்த மாநிலத்தில் இருந்து கா்நாடகாவுக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், ‘கேரளா தங்கக் கடத்தல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், கேரள அரசு உயரதிகாரிகள், அரசில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் இடையே நெருங்கியத் தொடர்பு இருக்கிறது. இந்த வழக்கை பொருத்தவரை, கேரளத்தில் நியாயமான, சுதந்திரமான விசாரணை நடைபெறுவது சாத்தியமில்லை. எனவே, வழக்கை கர்நாடகாவுக்கு மாற்ற வேண்டும்’ என்று அமலாக்கப்பிரிவு சார்பில் கோரப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), அமலாக்கத் துறை, சுங்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE