காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகேதாட்டு குறித்த விவாதம் இல்லை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படவில்லை.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் கடந்த மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. அதில் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் 3 முறை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 'காவிரி நீர்மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு திட்டம் குறித்துவிவாதிக்கக்கூடாது''என உத்தர விட்டது.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் ஆணையத்தின் த‌லைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த நீர் வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாக மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படவில்லை.

அதேவேளையில் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர், மேட்டூர் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளியேற்றம், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் அளவு, தடுப்பணைகள் பராமரிப்பு, மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுமார் 25 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மேகேதாட்டு விவகாரம் குறித்த வழக்கை வரும் 26ம் தேதி முதல் உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE