இளைஞர்களுக்கு ராணுவ சேவையை கட்டாயமாக்கும் திட்டம் ஏதுமில்லை: மத்திய அரசு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இளைஞர்களுக்கு ராணுவ சேவையை கட்டாயமாக்கும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையின் மழைக்காலக் கூட்டத்தொடரில் பாஜக எம்.பி அருண் குமார் சாகர், பிற மக்களவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட் எழுத்துபூர்வமாக தெரிவித்த பதில்: ஆயுதப்படைகளில் இளைஞர்கள் கட்டாயம் சேருவதற்காக அரசாங்கம் எந்த திட்டத்தையும் வகுக்கவில்லை. சைனிக் பள்ளிகள், அக்னிபத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஈடுபத்தப்படவில்லை.

அரசு சாரா நிறுவனங்களும், தனியார் பள்ளிகளும் மாநில அரசுகளுடன் இணைந்து 100 சைனிக் பள்ளிகளை அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டம் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநிலம், யூனியப் பிரதேசங்களின் பள்ளிகளுக்கும் பொருந்தும். தகுதிகளை பூர்த்தி செய்து விண்ணப்பித்த அரசுசாரா, தனியார் மற்றும் மாநில அரசுப் பள்ளிகளின் விண்ணப்பங்களுக்கு சைனிக் பள்ளிகள் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆயுதப்படைப் பிரிவினர் செய்து வருகின்றனர்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE