15-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல்: பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு அபார வெற்றி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (64) அமோக வெற்றி பெற்றார். அவர் 64 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்தன.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பாஜக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் வேட்பாளர் களாக அறிவிக்கப்பட்டனர்.

பாஜக கூட்டணி வேட்பாளர் முர்மு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்தக் கூட்டணியில் இடம்பெறாத பல்வேறு கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன.

கடந்த 18-ம் தேதி நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில் 771 எம்.பி.க்களும், 4,025 எம்எல்ஏ.க்களும் வாக்களித்தனர். ஒட்டுமொத்தமாக 99 சதவீத வாக்குகள் பதிவாகின.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் டெல்லியில் நேற்று எண்ணப்பட்டன. முதல் சுற்றில் எம்.பி.க்களின் வாக்குகளும், தொடர்ந்து எம்எல்ஏ.க்கள் வாக்குகளும் எண்ணப்பட்டன. இறுதியில், திரவுபதி முர்முவுக்கு ஒட்டுமொத்தமாக 2,824 வாக்குகள் கிடைத்தன. இதன்படி அவருக்கு 6,76,803 வாக்கு மதிப்பு கிடைத்தது. முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 1,877 வாக்குகள் கிடைத்தன. இதன்படி அவருக்கு 3,80,177 வாக்கு மதிப்பு கிடைத்தது. சின்ஹா 36 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

திரவுபதி முர்மு நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர், 2-வது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வரும் 25-ம் தேதி அவர் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கிறார்.

பிரதமர் மோடி வாழ்த்து: பிரதமர் மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், "புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். எம்எல்ஏவாக, அமைச்சராக, ஆளுநராக அவர் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். இதேபோல, மிகச் சிறந்த குடியரசுத் தலைவராக அவர் நாட்டை வழிநடத்துவார். 130 கோடி இந்தியர்களும் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் உருவெடுத்துள்ளார். இந்தியா புதிய வரலாறை எழுதுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், திரவுபதி முர்முவை டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உடனிருந்தார்.

யஷ்வந்த் சின்ஹா வாழ்த்து: எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், "குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசமைப்புச் சாசனத்தின் பாதுகாவலனாக, அச்சமின்றியும் எவ்வித விருப்பு, வெறுப்பின்றியும் அவர் பணியாற்றுவார் என்று ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

சொந்த கிராமத்தில் கொண்டாட்டம்: நாட்டின் புதிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பூர்வீக கிராமமான ஒடிசா மாநிலம் உபர்பேடாவில் 300 வீடுகள் உள்ளன. சுமார் 6,000 பேர் அங்கு வசிக்கின்றனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்தது, அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

கிராம மக்கள் ஒன்று திரண்டு லட்டுகளைத் தயாரித்து, அனைவருக்கும் வழங்கினர். கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலும் இளைஞர்கள் டிரம்ஸ் இசைத்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாரம்பரிய உடையணிந்த இளைஞர்களும், இளம்பெண்களும் பாரம்பரிய நடனமாடினர்.

முதல்வர்கள், தலைவர்கள் வாழ்த்து: திரவுபதி முர்முவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்