மகத்தான வெற்றி: நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் ஆகிறார் திரவுபதி முர்மு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு பதவியேற்கவுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ள திரவுபதி முர்மு, நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைவதால், புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் பதிவான வாக்குகள் வாக்குப்பெட்டியில் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது. தொடக்கக்கட்ட பணிகளுக்கு பின்னர் பகல் 1.30 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

திரெளபதி முர்மு ஒட்டுமொத்தமாக 6,76,803 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3,80,177 வாக்குகள் பெற்று படுதோல்வி.

நாட்டின் முதல் பழங்குடியினப் பெண், இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை அடைந்துள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதிய குடியரசுத் தலைவர் திரவுபதி வரும் 25-ம் தேதி பதவி ஏற்கவுள்ளார்.

இதற்கிடையில், ஒடிசாவின் ராய்ரங்பூரில் வெற்றியை கொண்டாடும் விதமாக காலையிலேயே 50,000 லட்டுக்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. முர்முவின் சொந்த கிராமத்திற்கு அதை சுற்றியுள்ள கிராமத்தினரும் வந்து அனைவரும் இணைந்து முர்முவின் வெற்றியை மாபெரும் ஊர்வலம் நடத்திக் கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE