காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க உச்ச நீதிமன்றம் தடை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் திட்டமிடப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தரிடம் முறையிடப்பட்டது. இதற்கு ஆணையமும் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், இவை உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிரானது எனக் கூறி தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, "கடந்த 2018-ம் ஆண்டு முதல் இப்போது வரை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி கர்நாடக அரசு முறையாக நீர் பங்கீட்டை மேற்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் புதிய அணை கட்டினால் கீழ் பாசன வசதி பெறக்கூடிய மாநிலங்களுக்கு முறையாக நீர் பங்கீடு கிடைக்காது.

மேலும், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது தொடர்பாக எந்தவொரு விவாதமும் நடத்த அனுமதிக்கக் கூடாது. காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் இதற்கான அமைப்பு கிடையாது. எனவே, ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணை குறித்த விவாதத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார்.

தமிழக அரசின் வாதத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர் சியாம் திவான், "கர்நாடக அரசு முறையாக நீர் பங்கீட்டை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் கர்நாடக அரசின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அணை கட்டப்படுவதால் கீழ் பாசன வசதி பெறக்கூடிய மாநிலங்களுக்கு நீர் பிரச்சினை இருக்காது. எனவே தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு தேவையற்றது" என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கருத்தையும் அறிய வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அப்போது, கர்நாடக அரசு தரப்பில் "வழக்கை ஒத்திவைக்கக் கூடாது , அதேபோல காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை நடத்தவும், அதில் மேகதாது குறித்து விவாதம் செய்யலாம் என்றும் உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.

அப்போது நீதிபதிகள், 2018-ம் ஆண்டு முதல் காத்திருக்கும் நிலையில் மேலும் ஒரு வாரம் காத்திருந்தால் என்னவாகப் போகிறது என கேள்வி எழுப்பி, விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 26) ஒத்தி வைத்தனர். மேலும், மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

வரும் வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடத்தலாம் என்றும், அந்தக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது என தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்