ஜிஎஸ்டி, அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி - நாள் முழுவதும் 2 அவைகளும் ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அக்னிபாதைத் திட்டம், ஜிஎஸ்டி வரி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் நாள் முழுவதும் 2 அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. ஆக. 12 வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை மாநிலங்களவை கூடியதும் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட 27 உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், திமுகவை சேர்ந்த கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், அதிமுகவை சேர்ந்த சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

இதை தொடர்ந்து, அவையின் பிற அலுவல்கள் தொடங்கியவுடன், அரிசி, தயிர் உள்ளிட்ட பாக்கெட் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5% ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவின் இருக்கைக்கு முன்பு நின்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். வெங்கய்ய நாயுடு பலமுறை கேட்டுக்கொண்ட பின்னரும் அவர்கள் இருக்கைக்குத் திரும்பவில்லை.

இதையடுத்து அவை செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், மக்களவை நேற்று காலை தொடங்கியதும் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்ஹா, உத்தர பிரதேச மாநில பாஜகவை சேர்ந்த 2 எம்பிக்கள் உள்பட 3 புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர்.

இதைத்தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லா அனுதாபம் தெரிவித்து இரங்கல் தீர்மானத்தை வாசித்து பேசினார். அதேபோல் மறைந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா அதிபர்களுக்கும், மறைந்த முன்னாள் எம்.பி.க்கள் 8 பேருக்கும் அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணிவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் வாக்களிப்பதற்காக அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியபோது ஜிஎஸ்டிவரி விதிப்பு, எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி நின்றபடி முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சலும்-குழப்பமும் நிலவியது.

இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் அக்னிபாதை திட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடர்ந்த நிலையில் மக்களவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்திவைத்தார் ராஜேந்திர அகர்வால்.

பிரதமர் அழைப்பு

முன்னதாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் அனைத்து எம்பிக்களும் வெளிப்படையாக பேச வேண்டும். தேவைப்பட்டால் விவாதங்கள் நடத்த வேண்டும். எதிர்க்கட்சியினரின் கருத்துகளை திறந்த மனதுடன் வரவேற்கிறோம். அனைத்து எம்.பி.க்களும் சிந்தித்து விவாதங்களை மேற்கொண்டு முடிந்தவரை பயனுள்ளதாக மாற்ற வேண்டும். குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதால் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE