“பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு இல்லை” - மத்திய இணையமைச்சர் பதில்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு இல்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்.பி டி.ரவிகுமாரின் கேள்விக்கு அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், திமுக எம்.பியுமான டி.ரவிகுமார் எழுப்பிய கேள்வியில், ‘பென்சில், ரப்பர், பேனா, நோட்டுப் புத்தகங்கள் முதலான கல்வி சார்ந்த உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதற்கு திட்டம் ஏதேனும் இருக்கிறதா? அவ்வாறு உள்ளது எனில் அதன் விவரங்களைத் தருக.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை குறித்த அரசின் நிலைப்பாடு என்ன? பெட்ரோல், டீசல் முதலான எரிபொருள் மீது விதிக்கப்பட்டிருக்கும் செஸ், சர்சார்ஜ் முதலான கூடுதல் வரிகளை உயர்த்தும் திட்டம் ஏதேனும் அரசிடம் இருக்கிறதா? அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தருக” எனக் கேட்டிருந்தார்.

இதற்கு இன்று மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலின் விவரம்: “மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜிஎஸ்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. பென்சில், பேனா, ரப்பர், நோட்டுப் புத்தகங்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலில் பரிந்துரை எதுவும் தற்போது இல்லை.

செவித்திறன் கருவிகளுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோல், அறுவை சிகிச்சை பெல்ட்கள் முதலான சாதனங்களுக்கு ஐந்து சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரி விகிதங்கள் (செஸ்கள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் உட்பட) உள்கட்டமைப்பு மற்றும் பிற மேம்பாட்டுச் செலவினங்களுக்கான ஆதாரங்களை உருவாக்கும் நோக்கத்துடன், சர்வதேச உற்பத்தி நிலவரம் போன்ற அனைத்து தொடர்புடைய காரணிகளையும் கணக்கில் கொண்டு அவ்வப்போது நிர்ணயம் செய்யப்படுகின்றன.

விலைகள், மாற்று விகிதம், வரி அமைப்பு, பணவீக்கம் மற்றும் தற்போதைய நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு அது முடிவு செய்யப்படுகிறது. டீசல், பெட்ரோல் மீதான கலால் வரியை உயர்த்தும் திட்டம் தற்போது இல்லை" என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE