நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை - மாநிலங்களவையின் சுற்றறிக்கையால் மீண்டும் சர்ச்சை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, போராட்டம், உண்ணாவிரதம், மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மாநிலங்களவையின் புதிய சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திங்கட்கிழமை 18-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. கடந்த காலங்களை போல் இந்த தொடரிலும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்துக்குள் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே இரு அவைகளின் உறுப்பினர்களும் போராட்டங்களை நடத்துவது வழக்கம்.

இந்நிலையில், மாநிலங்களவையின் செய்தி மடலில் நேற்று ஒருபுதிய சுற்றறிக்கை வெளியாகி உள்ளது. மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி வெளியிட்டுள்ள அந்த சுற்றறிக்கையில், ‘‘நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, போராட்டம், உண்ணாவிரதம், மத நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமலாக்குவதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்றுநம்புவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மாநிலங்களவையின் காங்கிரஸ் கட்சி கொறடா ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘விஸ்வகுருவின் புதிய தீர்வு, தர்ணாவுக்கு தடை’’ என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் ஆங்கிலத்தில் ‘D(h)arna’ எனும் வார்த்தைக்கு ‘தர்ணா’, ‘அச்சம்’ என இரட்டை அர்த்தம் கொள்ளும் வகையில், இதற்காக அச்சப்பட மாட்டோம் என்ற பொருளில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, ஜெய்ராம் ரமேஷுக்கு மாநிலங்களவை செயலகம் அளித்துள்ள விளக்கத்தில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக இதுபோன்ற சுற்றறிக்கைகள் வெளியிடுவது வழக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

இத்துடன் ஏற்கெனவே வெளியான சில சுற்றறிக்கைகளின் நகல்களும் அதில் இணைக்கப்பட்டுள்ளன. இதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது டிச.2,2013-ம் ஆண்டு வெளியிட்ட சுற்றறிக்கையும் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன் நேற்றுமுன்தினம் தடை செய்யப்பட்ட சொற்களின் தொகுப்பு வெளியாகி சர்ச்சை கிளம்பியது. இதன் மீது எதிர்கட்சிகள் அளித்த புகாருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த பதிலில், ‘‘எந்த சொற்களும் புதிதாக தடை செய்யப்படவில்லை. இதற்கு முன் நாடாளுமன்றக் கூட்டங்களில் அவைக் குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்டவைதான் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். இதனால் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE