சர்தார் சரோவர் அணையில் இருந்து வறட்சியான கட்ச் பகுதிக்கு வந்தடைந்தது நர்மதா நதி நீர் - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

By செய்திப்பிரிவு

ராஜ்கோட்: சர்தார் சரோவர் அணையிலிருந்து 750 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட மிக நீண்ட கால்வாய் மூலம் நர்மதா நதி நீர், குஜராத்தின் வறட்சியான கட்ச் பகுதிக்கு வந்தடைந்துள்ளது.

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. இந்த அணையால் பல ஆதிவாசி கிராமங்கள் நீரில் மூழ்கும் என்று எதிர்ப்பு தெரிவித்து மேதா பட்கர், அருந்ததி ராய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடினர். அதையும் மீறி சர்தார் சரோவர் அணை கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

இங்கிருந்து குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் வடக்கு குஜராத் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் நர்மதா நதி நீர் கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தின் வறட்சியான மாவட்டமான கட்ச் பகுதிக்கு சர்தார் சரோவர் அணையில் இருந்து நர்மதா நதி நீரை கொண்டு செல்வதற்கு 750 கி.மீதூரத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டது.

இதன் இறுதி பகுதி கட்ச் மாவட்டத்தின் மாண்ட்வி தாலுகாவில் உள்ள மாத் குபா என்ற கிராமத்தில் முடிகிறது. இப்பகுதிக்கு கடந்த புதன்கிழமை நர்மதா நதி நீர் வந்தடைந்தபோது அப்பகுதி மக்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். மிகவும் வறட்சியான கட்ச் மாவட்டத்துக்கு, நர்மதா நதி நீரை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கனவால் இத்திட்டம் தற்போது சாத்தியமாகியுள்ளது. இந்த கட்ச் பிரிவு கால்வாய் திட்டம் நவீன இந்தியாவின், மிகச் சிறந்த உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்று.

இத்திட்டம் நிறைவடைந்தது குறித்து சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஜே.பி.குப்தா அளித்த பேட்டியில் கூறியதாவது:

சர்தார் சரோவர் அணையில் இருந்து கட்ச் பிரிவு வரை கால்வாயில் கட்டுமான பணிகள் மற்றும் இன்ஜினியரிங் பணிகள் முடிவடைந்து தற்போது தண்ணீர் செல்வதை பரிசோதித்து கொண்டிருக்கிறோம். மிக நீண்ட தூரத்துக்கு மனிதனால் அமைக்கப்பட்ட கால்வாய் இது. இந்த கால்வாய் கட்ச் பகுதிக்கு நுழைவதற்கு முன்பாக, ரான் ஆப் கட்ச் என்ற இடத்தில் மிகப் பெரிய தாழ்வு பகுதி இருந்தது.

இதனால் தரை மட்டத்திலிருந்து 16 மீட்டர் உயரத்துக்கு கட்ச் பிரிவு கால்வாய் அமைக்கப்பட்டது. இது 6 மாடி கட்டிடம் அளவுக்கு உயரமானது.

இந்த கால்வாய் தோட்டங்களையும், வயல்களையும் கடந்து செல்கிறது. பல பிரச்சினைகளை சமாளித்து இந்த கால்வாய் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நர்மதா நதி நீர், கட்ச் பகுதியின் பிடாடா மற்றும் கோடே ஆகிய கிராமங்களை சென்றடைந்தபோது, அப்பகுதி மக்கள் கால்வாய் கரைகளில் கூடி, மேளம், தாளம் முழங்க உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE