மகாராஷ்டிராவில் புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த மாநில அரசு ஒப்புதல்

By செய்திப்பிரிவு

மும்பை: புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மகாராஷ்டிர மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுவதற்கான 16 காரணங்களை பட்டியலிட்டு தேசிய விரைவு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்ஹெச்எஸ்ஆர்சிஎல்) மாநில தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியிருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 431 ஹெக்டேர் நிலம் தேவை. இதில் 71 சதவீத நிலம்தான் இதுவரை இத்திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பொறுப்பேற்ற மாநில அரசு இத்திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இதைத் தொடர்ந்து இத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக இதுவரை நிலவி வந்த அனைத்து முட்டுக்கட்டைகளையும் நீக்குவ தாக அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக வனத் துறையிடம் இருந்து இரண்டாம் நிலை ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தை விரைவுபடுத்தும் விதமாக அனைத்து கோரிக்கைகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை மெட்ரோபாலிடன் பிராந்திய மேம்பாட்டு ஆணைய அதிகாரி ஒருவர் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்தை வேறிடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இந்த இடத்தில்தான் தரை தளத்திலிருந்து மூன்று நிலைகள் கீழே இருக்கும் வகையில் புல்லட் ரயில் நிலையம் 6 பிளாட்பாரம்களுடன் கட்டப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டிசம்பருக்குள் இந்தப் பகுதியில் தேவையான நிலம் அளிக்கப்படும் என மாநில அரசு தரப்பில் உறுதியளிக்கப் பட்டது.

மொத்தம் 352 கி.மீ. தூர இத்திட்டப்பணியில் 75 கி.மீ. தூரத்துக்கு முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் ஆறுகளின் மீது பாலம் கட்டுவது, வடி நிலைகளில் இரும்பு பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் 180 கி.மீ. தூரத்துக்கு நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வாபி மற்றும் சபர்மதி இடையிலான 8 ரயில் நிலையங்கள் கட்டும் பணிகள் பல்வேறு கட்ட நிலைக்கு முன்னேறியுள்ளன. இதனால் வாபி-சபர்மதி இடையிலான சோதனை ஓட்டம் விரைவில் நடக்கும் என தெரிகிறது.

அகமதாபாத் - மும்பை இடையில் ரூ. 1.08 லட்சம் கோடி செலவில் ஜப்பானின் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு ஜப்பானிய நிறுவனம் 81 சதவீதம் கடன் வழங்குகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE