எந்தச் சொற்களுக்கும் தடை விதிக்கவில்லை. ஆனால்... - மக்களவைத் தலைவர் விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற நெறி பிறழ்ந்த சொற்கள் பட்டியல் - 2022 வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதற்கு விரிவான விளக்கம் கொடுத்துள்ளார் மக்களவை தலைவர் ஓம் பிர்லா.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மக்களவைச் செயலர் அவை நாகரிகமற்ற வார்த்தைகள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதிலுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகவும், மீறி பயன்படுத்தினால் அவைக் குறிப்பிலிருந்து அந்த வார்த்தைகள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தடை செய்யப்பட்ட வார்த்தைகளின் பட்டியல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஆங்கில அகர வரிசையில் அவை பட்டியலிடப்பட்டுள்ளன. 40 வார்த்தைகளும் சில சொற்றொடர்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

"தடை செய்யப்பட்ட வார்த்தைகள் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி என அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வந்தவை. எதிர்க்கட்சியினர் மட்டுமே பயன்படுத்தும் வார்த்தைகளை தெரிவு செய்து நீக்கவில்லை.

முன்பு அவை நாகரிகமற்ற வார்த்தைகள் அடங்கிய தொகுப்பை வெளியிடுவது வழக்கம். காகிதங்களை வீணாக்க விரும்பாமல் அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். எந்த வார்த்தையையும் தடை செய்யவில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பை தான் இப்போது செயலகம் வெளியிட்டு உள்ளது. மறுபக்கம் சூழல் மற்றும் பிற உறுப்பினர்கள் வெளிப்படுத்திய ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு வார்த்தைகளை நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது" என தெரிவித்துள்ளார் ஓம் பிர்லா.

தடை செய்யப்பட்டுள்ள சில இந்தி வார்த்தைகளும் அவற்றின் அர்த்தமும்: chamchagiri (துதிபாடி), chelas (வாரிசுகள்), tanashah (சர்வாதிகாரி), tanashahi (சர்வாதிகாரம்), jumlajivi, dohra charitra (இரட்டை நிலைப்பாடு), baal buddhi (சிறுப்பிள்ளைத் தனம்), Shakuni (சகுனி), Jaichand, Khalistani (காலிஸ்தானி), vinash purush (நாசக்காரன்), khoon ki kheti (ரத்ததை அறுவடை செய்பவர்), nautanki (நாடகதாரி), dindhora peetna (சுயதம்பட்டம் அடிப்பவர்), behri sarkar (காதுகேளாத அரசு) and nikamma (உதவாகரை) போன்ற இந்தி வார்த்தைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE