“தலைமைப் பொருளாதார ஜோதிடரை நியமிப்பீர்” - நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்த ப.சிதம்பரம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளை விடுத்து மத்திய நிதியமைச்சர் நாசா புகைப்படங்களை சிலாகித்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “தலைமைப் பொருளாதார ஜோதிடரை வேண்டுமானால் நியமிக்கலாம்” என்று கிண்டல் செய்துள்ளார்.

தன்மீது நம்பிக்கையிழந்த நிதியமைச்சர் ஆரம்பகட்டமாக தலைமைப் பொருளாதார ஜோதிடரை வேண்டுமானால் நியமிக்கலாம் என்றும் அவர் கிண்டல் செய்துள்ளார்.

இது தொடர்பாக சிதம்பரம் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், "பணவீக்கம் 7.01 சதவீதமாக உள்ளது, வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமாகவும் உள்ளது. ஆனால் நிர்மலா சீதாராமனோ ஜூபிடர், ப்ளூட்டோ படங்களை பகிர்ந்துள்ளார்.

இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. அவர் தன் மீதும், தனது அமைச்சகத்தின் மீதும், பொருளாதார வல்லுநர்கள் மீதும் நம்பிக்கையை இழந்துவிட்டார். அவர் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேற்று கிரகத்தை நாடுகிறார் போல. அதற்காக அவர் முதலில் பொருளாதாரம் தெரிந்த ஜோதிடரை நியமிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டது. அதனை உலகமே கொண்டாடி வருகிறது. அதனைக் கொண்டாடும் வகையில் நிர்மலா சீதாராமன் பகிர்ந்த ட்வீட்டையே ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE