சிவசேனாவின் இரு அணி எம்எல்ஏக்கள் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிவசேனா இரு அணி எம்எல்ஏக்கள் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் பிரதான கட்சியான சிவசேனாவில் 55 எம்எல்ஏக்கள் இருந்தனர். இதில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது.

கடந்த ஆட்சியில் ஷிண்டே உட்பட 16 சிவசேனா எம்எல்ஏக் களுக்கு சட்டப்பேரவையின் அப்போதைய துணைத் தலைவர் நரஹரி ஷிர்வால் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து 16 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 12-ம் தேதி வரை 16 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

இதனிடையே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக உள்ள 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி ஷிண்டே தரப்பில் சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து உத்தவ் மற்றும் ஷிண்டே தரப்பு எம்எல்ஏக்கள் 53 பேரும் உரிய விளக்கம் அளிக்க கோரி சட்டப்பேரவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த சூழலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிடம் சிவசேனா தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் நேற்று முறையிட்டார்.

"மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை எதிர்த்தும், ஷிண்டே தரப்பு கொறடா நியமனத்தை எதிர்த்தும் சிவசேனா கொறடா சுனில் பிரபு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். ஷிண்டே ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா பொதுச் செயலாளர் சுபாஷ் தேசாய் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை. இவற்றை உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும்" என்று கபில் சிபல் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி ரமணா, "மனுக்களை விசாரிக்க அரசியல் சாசன அமர்வை நியமிக்க வேண்டும். இதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இப்போதைக்கு சிவசேனாவின் இரு அணிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE