மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 164 வாக்குகளும் எதிராக 99 வாக்குகளும் பதிவாகின.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில், சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 39 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் உத்தவ் தாக்கரே கடந்த 29-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து கடந்த 30-ம் தேதி புதிய அரசை அமைத்தன. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து பேரவையில் 4-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.
அதன்படி, சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்புக் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாளில் பேரவைத் தலைவர் தேர்வு நடந்தது. இதில் பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர், 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ராஜன் சால்விக்கு 107 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இந்நிலையில், சட்டப்பேரவையின் 2-ம் நாள் கூட்டம், பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது பாஜகவின் சுதிர் முங்கந்திவார் மற்றும் சிவசேனாவின் பரத் கோகவாலே ஆகியோர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினர். ‘டிவிஷன் ஆப் வோட்’ முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
» மகாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது: வாட் வரியை குறைக்க ஏக்நாத் ஷிண்டே முடிவு
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவர், உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவை தெரிவிக்குமாறு கோரினார். இந்த வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக ராகுல் நர்வேகர் அறிவித்தார்.
சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 288. இதில் ஒரு இடம் காலியாக உள்ளது. பெரும்பான்மை பலத்துக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை இருந்தது. இதில் அரசுக்கு ஆதரவாக 164 வாக்குகளும் எதிராக 99 வாக்குகளும் பதிவானதாக பேரவைத் தலைவர் தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சியின் 2 எம்எல்ஏக்களும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் ஒரு எம்எல்ஏவும் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தனர். காங்கிரஸ் கட்சியின் 11 எம்எல்ஏக்கள், தேசியவாத காங்கிரஸின் (என்சிபி) 6 எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பின்போது அவையில் இல்லை. இதில் என்சிபியின் அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
பாஜக எம்எல்ஏக்களான முக்தா திலக், லட்சுமண் ஜெகதாப் ஆகியோர் உடல்நலக்குறைவால் அவைக்கு வரவில்லை. ராகுல் நர்வேகர் பேரவைத் தலைவர் என்பதால் அவரால் வாக்களிக்க முடியாது. ஏஐஎம்ஐஎம் கட்சியின் 1 எம்எல்ஏ அவைக்கு வரவில்லை.
அணி மாறிய உத்தவ் ஆதரவாளர்..
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த சந்தோஷ் பங்கர், நேற்று முன்தினம் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இவர் நேற்றைய வாக்கெடுப்பிலும் ஷிண்டேவுக்கு ஆதரவாக வாக்களித்தார். மேலும், மற்றொரு எம்எல்ஏவான ஷ்யாம் சுந்தர் ஷிண்டேவும் கடைசி நேரத்தில் அணி மாறி ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
ஒரு வாரத்துக்கு முன்பு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கியபோது, சந்தோஷ் பங்கர் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் இரு கைகளை கூப்பியபடி, “உத்தவ்ஜிக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் திரும்பி வர வேண்டும்” என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
சிவசேனா கட்சியின் தலைமை கொறடாவாக பரத் கோகவாலேவை, புதிய பேரவைத் தலைவர் அங்கீகரித்ததை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு வரும் 11-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேபோல முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பரத் கோகவாலே சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிவசேனா கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது ஈ.டி. அரசுதான்..
மகாராஷ்டிராவில் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை இழுப்பதற்காக, பாஜகவினர் அமலாக்கத் துறையை (ஈ.டி.) தவறாக பயன்படுத்தியதாக சிவசேனா கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், “ஈ.டி. அரசு, ஈ.டி. அரசு” என கோஷம் எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் இணைந்து மீண்டும் கூட்டணி அரசை அமைத்துள்ளோம் (2014 முதல் 2019 வரை பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்றது). சிவசேனா தொண்டர் ஒருவர் முதல்வராகி உள்ளார். எங்கள் கட்சித் தலைமையின் உத்தரவுப்படி நான் துணை முதல்வராகி உள்ளேன்.
எங்கள் அரசை ஈ.டி. அரசு என சிலர் கூறுகின்றனர். ஆம், இது ஈ.டி. அரசுதான். அதாவது ஈ என்றால் ஏக்நாத் ஷிண்டே, டி என்றால் தேவேந்திர பட்னாவிஸ். (இருவருடைய பெயரின் முதல் எழுத்து ஈ. டி. என சூசகமாக குறிப்பிட்டார்). கடந்த சில ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் தலைமைக்கு பற்றாக்குறை நிலவியது. இப்போது அவையில் 2 தலைவர்கள் இருக்கிறோம். எங்களை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் அணுகலாம். முதல்வர் ஷிண்டேவுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். புதிய அரசில் அதிகார மோதல் ஏற்படாது என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
8 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago