மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவை தலைவராக பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கைவாக்கெடுப்பு நடக்கிறது. இதுதொடர்பாக ஆளும் பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தின.
மகாராஷ்டிராவில் பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 29-ம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக, சிவசேனா அதிருப்தி அணிஇணைந்து கடந்த 30-ம் தேதி மாநிலத்தில் புதிய அரசை அமைத்தன. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
இதைத் தொடர்ந்து பேரவையில் 4-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர்உத்தரவிட்டார். அதன்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்பு கூட்டம் நேற்றுதொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் சுமார் 50 பேர் கோவாவில் இருந்துமும்பைக்கு சிறப்பு விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலைஅழைத்து வரப்பட்டனர். இவர்களை அழைத்து வர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோவா சென்றிருந்தார்.
சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியதும் பேரவைத் தலைவர் தேர்வு நடந்தது. இதில் பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட ராஜன் சால்விக்கு 107 வாக்குகள் கிடைத்தன.
» கரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில் வலைப்பயிற்சியை தொடங்கினார் கேப்டன் ரோகித் சர்மா
» 2022 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை | இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியை சமன் செய்த இந்தியா
ராகுல் நர்வேகர் (45) மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் மிக இளமையான தலைவர் என துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். இவரது மாமனார் ராம்ராஜே நாயக், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்ட மேலவை தலைவராக உள்ளார். சமாஜ்வாடியின் 2 எம்எல்ஏக்களும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் எம்எல்ஏ ஒருவரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
12 எம்எல்ஏக்கள் வரவில்லை
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பலம் 288 ஆகும். சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் அண்மையில் உயிரிழந்தார். இதன்காரணமாக பேரவையில் தற்போது 287 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.
இதில் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோர் ஊழல் வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளனர். அந்த கட்சியை சேர்ந்த தத்தாத்ரே பரணி, அன்னா போன்சடே, நிலேஷ்லங்கி, பாபன்தாதா ஷிண்டே, திலீப்ஆகியோர் நேற்று சட்டப்பேரவைக்கு வரவில்லை.
காங்கிரஸை சேர்ந்த பிரணதி ஷிண்டே, ரஞ்சித் காம்ப்ளே மற்றும் மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏ முப்தி முகமது ஆகியோரும் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பாஜகவைச் சேர்ந்த முக்தா திலக், லட்சுமண் ஜெகதாப் ஆகியோர் மிக தீவிர உடல் நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாக 12 எம்எல்ஏக்கள் நேற்று பேரவைக்கு வரவில்லை.
முதல்வர் விளக்கம்
சட்டப்பேரவையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது: சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் கொள்கைகளின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா அரசு பதவியேற்றுள்ளது. இந்திய அரசியலில் இதற்கு முன்பு எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆளும் அரசில் இணைவது வாடிக்கையாக இருந்தது. முதல்முறையாக மகாராஷ்டிராவில் ஆளும் அரசில் இருந்து எதிர்க்கட்சிக்கு தலைவர்கள் மாறியுள்ளனர். கடந்த ஆட்சியில் நான்மூத்த அமைச்சராக பணியாற்றினேன். நானும், பல்வேறு அமைச்சர்களும் அரசை விட்டு விலகி புதிய அரசை அமைத்துள்ளோம்.
எங்கள் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருப்பதாக சிலர் (உத்தவ் தாக்கரே) கூறி வந்தனர். சுமார் 25 எம்எல்ஏக்கள் வரை தொடர்பில் இருப்பதாக ஊடகங்களுக்கு அவர்கள் பேட்டியளித்தனர். அனைத்தும் இன்று பொய்யாகிவிட்டது.
யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை
எனக்கு ஆதரவு அளிக்கக் கோரி எந்தவொரு எம்எல்ஏவையும் நிர்ப்பந்திக்கவில்லை. அவர்களாகவே என்னோடு இணைந்திருக்கின்றனர். நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை. விதியின்காரணமாக அந்த பதவியில் அமர்ந்துள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த பிரதமர்நரேந்திர மோடியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசும்போது, “ஷிண்டே தலைமையிலான அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்” என்று உறுதி அளித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
சிறப்பு கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. பேரவைத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணிக்கு 164 வாக்குகள் கிடைத்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 144 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஷிண்டே தலைமையிலான அரசு எளிதில் வெற்றி பெறும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
எதிர்க்கட்சிகள் தரப்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் அந்த கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்துவிவாதிக்கப்பட்டது. சிவசேனா, காங்கிரஸ் தரப்பிலும் தனித்தனியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago