யார் இந்த தீஸ்தா சீதல்வாட்? - குஜராத் கலவர வழக்கு முதல் கைது பின்புலம் வரை

By செய்திப்பிரிவு

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் போலீஸார் கைது செய்தனர்.

குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய வழக்கில் தீஸ்தா மட்டுமன்றி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சஞ்சீவ் பட் சிறையில் உள்ளார். ஸ்ரீகுமார் கைது செய்யப்பட்டார்.

தீஸ்தா சீதல்வாட்டின் கைதுக்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும், மத்திய அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத் தலைவர் கண்டனம் தெரிவித்ததுடன், அவரை விடுதலை செய்யவும் வலியுறுத்தி இருந்தார்.

யார் இந்த தீஸ்தா சீதல்வாட்? - குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தை நிகழ்த்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக அதிகமாகப் போராடியவை மனித உரிமை அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான். அப்படி குஜராத்தில் போராடி வருபவர்களுள் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (Citizen for Justice and Peace) அமைப்பின் சார்பில் செயல்படும் தீஸ்தா சீதல்வாட்டும் ஒருவர்.

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய தீஸ்தா சீதல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரலான எம்.சி. சீதல்வாடின் பேத்தி. வழக்கறிஞர் அதுல் சீதல்வாட், சீதா சீதல்வாடின் மகள். மும்பையில் தி டெய்லி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ் இந்தியா ஆகியவற்றில் பணிபுரிந்தார். தீஸ்தா நினைத்திருந்தால், பரபரப்பான, பிரபலமான ஒரு பத்திரிகையாளராக மாறியிருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் விரும்பிய பத்திரிகைப் பணியே, அவரது வாழ்க்கையின் திருப்பத்துக்குக் காரணமாக அமைந்தது.

1993-ல் மும்பையில் மதக் கலவரம் மூண்டபோது, அவரது வாழ்க்கை தலைகீழ் மாற்றம் கண்டது. பத்திரிகையாளர் என்பதால், கலவரச் சம்பவங்களுடன் அவர் நேரடியாக உறவாட வேண்டியிருந்தது. கண்ணெதிரே நிகழ்ந்த கலவரக் காட்சிகள், அவரை உலுக்கின. அதன் பிறகு முழுநேர மனித உரிமை செயற்பாட்டாளராக மாறினார்.

மத அடிப்படைவாதத்துக்கு எதிரான போர் என்ற பொருள் கொண்ட ‘கம்யூனலிஸம் காம்பாட்’ என்ற மாத இதழை, கணவர் ஜாவெத் ஆனந்துடன் சேர்ந்து தொடங்கினார். ஜாவெத் ஆனந்தும் ஒரு முன்னாள் பத்திரிகையாளர்தான். தொடர்ந்து மத அடிப்படைவாதச் சக்திகளுக்கு எதிராகவும், அவர்களது வெறுப்புணர்வுக் கொள்கைகளை அம்பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தீஸ்தா செயல்பட்டு வருகிறார்.

தூண்டுதல் பின்புலம்: "மதக் கலவரத்தை நிகழ்த்தியவர்கள் எப்போதுமே தண்டனை பெறாமல் தப்பித்துவிடுவதுதான், எங்கள் மனஉறுதியை ஆழப்படுத்தி, நமது சமூக அமைப்பில் உள்ள கோளாறுகளை வெளிக்கொண்டுவர வேண்டுமெனத் தூண்டியது.

எனது தாயகம் குஜராத். 1998-ல் இருந்து குஜராத் பற்றி நான் ஆராய்ச்சி செய்துவருகிறேன். அங்கு வழக்கத்துக்கு மாறான வெறுப்புணர்வு விதைக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 அன்று கோத்ராவில் ரயில் எரிந்தபோது, துயரம் நிரம்பிய நெருக்கடியான பல அழைப்புகள் எனக்கு வந்தன. நடந்ததை நேரில் அறிய குஜராத்தில் கால் பதித்தபோது, நான் உடைந்து போனேன். எல்லா நம்பிக்கைகளும் நொறுங்கிப் போய்விட்ட நிலையில், குறைந்தபட்ச நம்பிக்கையையாவது உத்தரவாதப்படுத்த வேண்டிய தேவை எனக்கு இருந்தது.

பெண்களின் கோபமும், அவநம்பிக்கையும், ஆண்களின் பயம் மிகுந்த கையாலாகத்தன்மையும் என்னை ஆழமாகப் பாதித்தன. பாதிக்கப்பட்டவர்களின் பயங்கரமான கதைகளைப் பதிவு செய்தபோது, ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நெருக்கடியும், விடை தேடும் கேள்விகளும் என் மனதை அரித்தெடுத்தன.

மதக் கலவரத்தில் நிகழ்த்தப்பட்ட தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் தீர்வே அளிக்கப்படுவதில்லை. குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனையும் கிடைப்பதில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்கள் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று, மேலும் மேலும் வலுவடைகிறார்கள்.

இதுதான் 1984-ல் டெல்லியிலும், 1992-ல் மும்பையிலும் நடந்தது. மும்பை கலவரம் போலில்லாமல், குஜராத் வழக்குகளின் இறுதிவரை போராடுவது என்று நான் முடிவெடுத்தேன்" என்று பேட்டி ஒன்றில் தனக்கான தூண்டுதல் குறித்து தீஸ்தா குறிப்பிட்டுள்ளார்.

கோத்ரா ரயில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீஸ்தா உதவ ஆரம்பித்தபோது, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பிரவிண் தொகாடியா, வெளிப்படையாக இவரை மிரட்டி இருக்கிறார்.

எதிர்ப்பு அடையாளம்: 2002 குஜராத் கலவரத்துக்குப் பின்னர் நரேந்திர மோடி நிர்வாகத்துக்கு எதிரான எதிர்ப்பு அடையாளங்களுள் ஒருவராக தீஸ்தாவும் மாறினார். குஜராத் மதக் கலவரம் தொடர்பான முக்கிய வழக்குகளில் மறு புலன் விசாரணை, மறு நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்த முதல் அமைப்புகளுள், தீஸ்தாவின் அமைப்பும் ஒன்று.

அவரது முயற்சியால்தான் பல முஸ்லிம்கள் இறக்கக் காரணமாக இருந்த பெஸ்ட் பேக்கரி வழக்கின் மறுவிசாரணை, குஜராத்துக்கு வெளியே வேறு மாநிலத்தில் நடத்த உத்தரவிடப்பட்டது. குஜராத் அரசின் பிம்பம் அந்த மாநிலத்திலும் இந்தியாவிலும் சரிந்துபோனதற்கு, இந்த வழக்கே முக்கியக் காரணம்.

அத்துடன் குஜராத் கலவரத்துக்குப் பின்னால் வகுக்கப்பட்ட சதித் திட்டம் தொடர்பாக மோடியை விசாரிக்க வேண்டும் என்ற கிரிமினல் வழக்கை, மறைந்த முன்னாள் எம்.பி. இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரியுடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தவர் தீஸ்தாதான்.

இந்த மனுதான், முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் நரேந்திர மோடிக்கும், அவருடைய அதிகாரிகளுக்கும் உள்ள நேரடி மற்றும் மறைமுகத் தொடர்பு பற்றிய பல்வேறு புகார்களைச் சிறப்புப் புலன்விசாரணைக் குழு (Special Investigation Team) விசாரிக்க வேண்டிய நெருக்கடியைக் கொடுத்தது.

"எனது பலம் எல்லாம் உயிர் பிழைத்திருப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் பலம்தான். அறம் சார்ந்த ஆழமான, திடமான நம்பிக்கைதான். மதக் கலவரக் குற்றவாளிகள், குற்றத்துக்குப் பொறுப்பாக்கப்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்ற எண்ணம்தான், எங்கள் அனைவருடைய போராட்டத்துக்கும் காரணம்" என்று ஒரு பேட்டியில் தீஸ்தா குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

மேல்முறையீட்டு வழக்கின் பின்னணி: குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பில் 58 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள குல்பர்க் சொசைட்டியில் கலவரம் ஏற்பட்டது. அதில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) தீவிர விசாரணை நடத்தியது.

இந்த வழக்கில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி மற்றும் உயரதிகாரிகள் பலர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த எஸ்ஐடி, அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உட்பட 64 பேருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை முடித்துக் கொண்டது.

இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ‘குஜராத் கலவர வழக்கை எஸ்ஐடி சரியாக விசாரணை நடத்தவில்லை. இந்தக் கலவரத்தில் மிகப் பெரிய சதி உள்ளது. இதுகுறித்து மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜகியா ஜாப்ரி மேல் முறையீடு செய்தார். அவருடன் இணைந்து தீஸ்தாவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “எஸ்ஐடி விசாரணை முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைக்கு தகுதியற்றது” என்று கூறி தள்ளுபடி செய்து சமீபத்தில் உத்தரவிட்டது.

தகவல் உறுதுணை: ஆதி வள்ளியப்பன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்