புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் உடனிருந்தனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 29-ம் தேதி கடைசி நாளாகும்.
இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு கடந்த வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடந்த 21-ம் தேதி அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹா நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற வளாகத்தில், தேர்தல் அதிகாரியும், மாநிலங்களவைச் செயலருமான பி.சி.மோடியிடம் அவர் வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி. ஆ.ராசா, தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.
இதுதவிர, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி, சவுகதா ராய், திமுக எம்.பி. திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தெலங்கானா ராஷ்டிர சமிதியின் கே.டி.ராமாராவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் மிசா பாரதி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் என்.கே.பிரேமச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முகமது பஷீர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரபுல் படேல் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் சிலைகளுக்கு யஷ்வந்த் சின்ஹா மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, “குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிப்பதில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளோம். நாங்கள் தனி நபரை ஆதரித்தாலும், உண்மையான மோதல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையில்தான் நடக்கிறது. ஒன்று, கோபம் மற்றும் வெறுப்பைக் கொண்ட ஆர்எஸ்எஸ் சித்தாந்தம். மற்றொன்று அனைத்து எதிர்க்கட்சிகளின் கருணை” என்றார்.
யஷ்வந்த் சின்ஹா கூறும்போது, “இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் முழுமையான அதிகாரம், சுதந்திரம் என்ற இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போர் ஆகும்” என்றார்.
84 வயதாகும் யஷ்வந்த் சின்ஹா, பிஹாரைச் சேர்ந்தவர். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் கேபினட் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். கடந்த 2018-ல் பாஜகவை விட்டு விலகிய அவர், புதிய கட்சியைத் தொடங்கினார். பின்னர், 2021 மார்ச் மாதம் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸில் இணைந்து, அக்கட்சியின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்படும் முன், அவர் திரிணமூல் கட்சியை விட்டு விலகினார்.
ஆம் ஆத்மி கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), உட்கட்சிப் பூசலில் சிக்கியுள்ள சிவசேனா ஆகிய முக்கிய எதிர்க்கட்சிகள் சின்ஹாவின் வேட்புமனு தாக்கலின்போது பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹேமந்த் ஆதரவு யாருக்கு?
சின்ஹாவை வேட்பாளராகத் தேர்வு செய்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஜேஎம்எம் பங்கேற்றது. ஆனால், இந்த தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜேஎம்எம் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது.
இந்நிலையில், ஜேஎம்எம் தலைவரும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் நேற்று டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பதை ஹேமந்த் சோரன் இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago