“யோகா... தனிநபர்களுக்கு மட்டுமின்றி நமது சமூகத்திற்கும் அமைதியை தருகிறது” - பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற 8-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற கண்காட்சியிலும் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியது: "மைசூர் போன்ற இந்தியாவின் ஆன்மீக தலங்களின் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த யோக முறை இன்று உலக சுகாதாரத்திற்கு வழிகாட்டியாக மாறியுள்ளது. யோகா இன்று உலகளாவிய ஒத்துழைப்பிற்கான அடிப்படையாக மாறி, மனித குலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வின் நம்பிக்கையை வழங்குகிறது. யோகா என்பது இன்று வீடுகளையும் தாண்டி உலகம் முழுவதும் பரவி வருவதை நாம் காண்கிறோம். இது ஆன்மீக உணர்தல் குறிப்பாக, முன்னெப்போதும் இல்லாத அளவு தொற்று பரவி வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் இயற்கையான மற்றும் பகிரப்பட்ட மனித உணர்வை மெருகேற்றியது யோகா.

யோகா இப்போது உலகளாவிய திருவிழாவாக மாறிவிட்டது. யோகா என்பது எந்த ஒரு தனி மனிதனுக்கும் சொந்தமானதல்ல, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் உரியது. எனவே தான், இம்முறை சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் - மனிதகுலத்திற்கான யோகா என்பதாகும். இந்தக் கருப்பொருளை உலகளவில் எடுத்துச் சென்றதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

யோகா நமக்கு அமைதியைத் தருகிறது. யோகாவின் அமைதி என்பது தனிநபர்களுக்கு மட்டும் அல்லாமல் நமது சமூகத்திற்கு அமைதியை தருகிறது. யோகா நாடுகளுக்கும் உலகிற்கும் அமைதியைக் கொண்டு வருகிறது. யோகா நமது பிரபஞ்சத்திற்கு அமைதியைக் கொண்டு வருகிறது. இந்த முழுப் பிரபஞ்சமும் நமது உடலிலிருந்தும் ஆன்மாவிலிருந்தும் தான் தொடங்குகிறது. பிரபஞ்சம் நம்மில் இருந்து தான் தொடங்குகிறது.

யோகா நமக்குள் இருக்கும் ஆன்மாவை நமக்கு உணர்த்துகிறது, விழிப்புணர்வை உருவாக்குகிறது. நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் அமிர்த பெருவிழாவை கொண்டாடும் தருணத்தில், இந்தியா யோகா தினத்தை கொண்டாடுகிறது. யோகா தினம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆற்றலைக் கொடுத்த இந்தியாவின் அமிர்த உணர்வை ஏற்றுக்கொள்வதாகும்.

அதனால்தான், இந்தியாவின் புகழ்பெற்ற, வரலாற்றின் சாட்சியாகவும் கலாச்சார ஆற்றலின் மையமாகவும் விளங்கும், நாடு முழுவதும் உள்ள சிறப்புமிக்க இடங்களில் பெரிய அளவில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் வரலாற்று தளங்களில் நடைபெறும் கூட்டு யோகா பயிற்சி அனுபவம் இந்தியாவின் கடந்த காலத்தையும், இந்தியாவின் பன்முகத்தன்மையையும், இந்தியாவின் விரிவாக்கத்தையும் ஒன்றாக இணைப்பது போன்றது.

தேசிய எல்லைகளைத் தாண்டி ஒருங்கிணைக்கும் யோகாவின் சக்தியை உணர்த்துவதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் இணைந்து, 79 நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுப் யோகா முயற்சியான ‘கார்டியன் யோகா ரிங்’ என்ற அற்புதமான நிகழ்ச்சி நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் எப்படி சூரியன் கிழக்கிலிருந்து மேற்காக நகர்கிறதோ, சூரியனின் நகர்வுக்கு ஏற்ப உலக நாடுகளில் உள்ள மக்கள், சூரியனின் முதல் கதிருடன் இணைந்து யோக நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். இதுவே கார்டியன் யோகா நிகழ்வு. இந்த யோகா பயிற்சிகள் ஆரோக்கியம், சமநிலை மற்றும் ஒத்துழைப்புக்கு அற்புதமான உத்வேகத்தை அளிக்கின்றன.

யோகா நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக அல்லாமல், இன்று அது நமது வாழ்க்கை முறையாக மாறிவிட்டது. யோகா ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கும் இடத்திற்குமானது என்று கட்டுப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. நாம் எவ்வளவு மன அழுத்ததில் இருந்தாலும், சில நிமிட தியானம் நம்மை ஆசுவாசப்படுத்தி, நமது உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. எனவே, யோகாவை கூடுதல் வேலையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நாம் யோகாவை அறிந்து கொள்ள வேண்டும், நாம் யோகாவை வாழ வேண்டும்.

நாம் யோகத்தை அடைய வேண்டும், யோகத்தை கடைப்பிடிக்க வேண்டும். நாம் யோகாவை வாழத் தொடங்கும் போது, நாம் தினம் செய்ய வேண்டிய பயிற்சியாக அல்ல, நமது ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதியைக் கொண்டாடுவதற்கான ஒரு ஊடகமாக யோகா மாறும். யோகாவுடன் தொடர்புடைய எல்லையற்ற சாத்தியக்கூறுகளை உணர வேண்டிய தருணம் இன்று. இன்று நமது இளைஞர்கள் அதிக அளவில் யோகா துறையில் புதிய புதிய சிந்தனைகளுடன் வருகிறார்கள்.

சர்வே பவந்து சுகினா, சர்வே சந்து நிராமயா என்ற உணர்வோடு யோகாவின் மூலம் ஆரோக்கியமான மற்றும் அமைதியான உலகத்தை விரைவுபடுத்துவோம். அதே உணர்வோடு, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் யோகா தின நல்வாழ்த்துக்கள்" என்று பிரதமர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE