புதுடெல்லி: ‘அக்னி பாதை’ திட்டத்தில் சேர அடுத்த மாதம் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
ராணுவம், கடற்படை, விமானப்படையில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் ‘அக்னி பாதை’ திட்டம், கடந்த 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. புதிய திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் அக்னி பாதை திட்டத்தில் வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
அக்னி பாதை திட்டத்தில் 17.5 முதல் 23 வயது வரையிலான இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஜூலையில் ஆன்லைன் பதிவு தொடங்கும். இந்திய ராணுவத்தின் https://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
அக்னி வீரர் பொதுப் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்ப பணிக்கு 12-ம்வகுப்பு அறிவியல் பாடப் பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்தர், பண்டக காப்பாளர் பணிக்கு 12-ம் வகுப்பு வணிகவியல் பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ட்ரேட்ஸ்மேன் பணிக்கு 10-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வழக்கமான நடைமுறைகளின்படி உடல் தகுதி, எழுத்து தேர்வு நடத்தப்படும். தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். ஆண்டுக்கு 30 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். மருத்துவர்களின் பரிந்துரைப்படி நோய் விடுப்பும் வழங்கப்படும். நாட்டின் எந்த பகுதியிலும் அக்னி வீரர்கள் பணியமர்த்தப்படலாம்.
முதலாம் ஆண்டில் மாதம் ரூ.30,000, இரண்டாம் ஆண்டில் ரூ.33,000, மூன்றாம் ஆண்டில் ரூ.36,500, நான்காம் ஆண்டில் ரூ.40,000 ஊதியம் வழங்கப்படும். மாத ஊதியத்தில் 30 சதவீதம் பங்களிப்பு தொகையாக பிடித்தம் செய்யப்படும். அதே அளவு தொகையை அரசு செலுத்தும். 4 ஆண்டு பணி நிறைவுக்குப் பிறகு ரூ.10.04 லட்சம் வட்டியுடன் வழங்கப்படும்.
பணிக் காலத்தில் அக்னி வீரர்களுக்கு ரூ.48 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு வழங்கப்படும். பணியின்போது உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.48 லட்சம் காப்பீடும், அரசு தரப்பில் ரூ.44 லட்சம் நிவாரண நிதியும் வழங்கப்படும். ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படாது.
நான்கு ஆண்டுகள் பணிக்குப் பிறகு அக்னி வீரர்களுக்கு பணித்திறன் சான்று வழங்கப்படும். 10-ம் வகுப்பு கல்வித் தகுதியுடன் பணியில் சேரும் வீரர்களுக்கு 12-ம் வகுப்புக்கான சான்றிதழ் அளிக்கப்படும்.
நான்கு ஆண்டுகள் பணிக்குப் பிறகு அக்னி வீரர்கள் நிரந்தர பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதி, திறன் அடிப்படையில் 25 சதவீத வீரர்கள் நிரந்தர பணியில் சேர்க்கப்படுவர். அவர்கள் 15 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பரில் பயிற்சி
அக்னி பாதை திட்டத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு வரும் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபரில் உடல் தகுதி, எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு டிசம்பரில் பயிற்சி தொடங்கப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய விமானப்படை சார்பில் வரும் 24-ம் தேதியும், கடற்படை சார்பில் வரும் 25-ம் தேதியும் அக்னி பாதை திட்டத்துக்கான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளன.
அக்னி பாதை திட்டத்தில் சேவையாற்றி ஓய்வு பெறும் வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு படை, மத்திய உள்துறையின் கீழ் செயல்படும் துணை ராணுவ படைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல்வேறு மத்திய அரசு துறைகள், மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களும் அக்னி வீரர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளன.
பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள் இன்று சந்திப்பு
அக்னி பாதை திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை முப்படைத் தளபதிகள் இன்று சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள அக்னி பாதை திட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த திட்டத்தால் தங்களுக்கு ராணுவத்தில் கிடைக்கும் வேலை மறுக்கப்படுகிறது என்று கூறி பிஹாரில் இளைஞர்கள் கடந்த 6 நாட்களாக கடும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பரவியுள்ளது. உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார், ஹரியாணா, பஞ்சாப், ஜார்க்கண்ட், டெல்லி, மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பிஹார், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களை போராட்டக்காரர்கள் எரித்தனர். இந்த வன்முறை சம்பவங்களில் நாடு முழுவதும் 12-க்கும்மேற்பட்ட ரயில்கள் எரிக்கப்பட்டுள்ளன. ரயில் மறியல், எரிப்பு போராட்டத்தால் ரயில்வேக்கு ரூ.700 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அக்னி பாதை திட்டத்துக்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவது குறித்து பிரதமர் மோடி மறைமுகமாக கூறும்போது, “மத்திய அரசு கொண்டு வரும் பல நல்ல திட்டங்கள் அரசியலாக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. பல முடிவுகள், பல சீர்திருத்தங்கள், தற்போது விரும்பத்தகாததாக தோன்றலாம். ஆனால் காலப்போக்கில், முழு நாடும் அதன் பலனை அனுபவிக்கும். சீர்திருத்தப் பாதை நம்மை புதிய மைல்கல்களுக்கு அழைத்துச் செல்லும்” என்று குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் தளபதிகள் இன்று சந்திக்க உள்ளனர். அப்போது, இளைஞர்களின் போராட்டம் மற்றும் அக்னி பாதை திட்டம் குறித்து பிரதமரிடம் அவர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago