இளைஞர்களை அக்னிபாதையில் நடக்க வைக்கிறார்; வேலை குறித்து தவறான நம்பிக்கை தருகிறார் பிரதமர் மோடி - ராகுல் தாக்கு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘வேலை குறித்து தவறான நம்பிக்கையை தொடர்ந்து அளித்து, நாட்டின் இளைஞர்களை வேலைவாய்ப்பின்மை என்ற அக்னிபாதையில் நடக்க வைக்கிறார் பிரதமர் மோடி’’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஓய்வூதிய செலவுகளை குறைப்பதற்காக, ராணுவத்தில் 4 ஆண்டுகள் சேவை ஆற்றும் அக்னிபாதை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்திட்டத்தை வாபஸ் பெறக்கோரி அவர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பலமாநிலங்களில் ரயில்கள் தீ வைத்துஎரிக்ககப்பட்டன. ரயில்வே சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.

இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் எனவும், அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இளைஞர்களுடன் இணைந்து காங்கிரஸ் எம்.பி.க்கள், தலைவர்கள், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று சத்தியாகிரக போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து காங்கிஸ் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘வேலைகுறித்த தவறான நம்பிக்கையை தொடர்ந்து அளித்து, இளைஞர்களை வேலைவாய்ப்பின்மைஎன்ற அக்னி பாதையில் பிரதமர்நடக்க வைத்துள்ளார். 8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பக்கோடா பொறிப்பதைத்தான் இளைஞர்கள் கற்றுக் கொண்டனர். நாட்டின் இந்த நிலைக்கு பிரதமர் மோடிதான் காரணம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக போராடி வரும் இளைஞர்களை சமாதானப்படுத்த, அக்னிபாதை திட்ட வீரர்களுக்கு, 4 ஆண்டு பணிக்குப்பின்பாதுகாப்புத்துறை அமைச்சகம்மற்றும் துணை ராணுவப்படை களில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. ஆனால், இத்திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

கொண்டாட்டம் வேண்டாம்

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ராகுல்காந்தி நேற்று முன்தினம் இரவு விடுத்துள்ள செய்தியில், ‘‘என் பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட வேண்டாம். நாட்டின் இளைஞர்கள் ஆவேசம் அடைந்து தெருக்களில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் துணை நிற்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE