அக்னி பாதை எதிர்ப்பு | பாதுகாப்புப் படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அக்னி பாதை எதிர்ப்புப் போராட்டம் வலுத்துவரும் நிலையில், பாதுகாப்புப் படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்துகிறார். 8 மாநிலங்களில் அக்னி பாதை எதிர்ப்புப் போராட்டம் வலுத்துள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

பாஜக - சந்திரசேகர ராவ் மோதல்: தெலங்கானா மாநிலத்தில் நேற்று நடந்த வன்முறையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதற்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 24 வயது இளைஞர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்த சந்திரசேகர ராவ், குடும்பத்தில் தகுதியுடைய ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார். மத்திய அரசின் திட்டமிடல் இல்லாமையே காரணம் என்று சாடியுள்ளார்.

மத்திய அரசின் வாக்குறுதி: அக்னி பாதை திட்டத்தின் தேர்வாகி 4 ஆண்டுகள் அக்னி வீரர்களாக பணியாற்றிவிட்டு ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களுக்கு சிஏபிஎஃப் எனப்படும் மத்திய ஆயுதப் படை, மற்றும் அசாம் ரைஃபில்ஸில் படைப்பிரிவில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், முதல் பேட்ச் அக்னி வீரர்களுக்கு சிஏபிஎஃப், அசாம் ரைஃபில்ஸில் சேர 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். அடுத்தடுத்த பேட்களில் வெளியேறுவோருக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதில் இருந்து 3 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருந்தாலும் நாடு முழுவதும் போராட்டம் சற்றும் குறையாத நிலையில் அக்னி பாதை எதிர்ப்புப் போராட்டம் வலுத்துவரும் நிலையில் பாதுகாப்புப் படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக் கொள்ளும் ‘‘அக்னி பாதை’’ திட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 13-ம் தேதி அறிமுகம் செய்தார்.

இந்தத் திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, பிஹாரில் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிஹார், உ.பி., ஹரியாணா என வட மாநிலங்களில் ஆரம்பித்த போராட்டம் நேற்று தெலங்கானாவுக்கும் பரவியது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தீவைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பிஹார் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 12 ரயில்களுக்கு தீவைக்கப்பட்டன. போராட்டம் நாடு முழுவதும் சுமார் 300 ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே, சென்னையிலும் இன்று அக்னி பாதை எதிர்ப்பு போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் ஈடுபட்டதும் கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE