காஷ்மீரில் காவல் உதவி ஆய்வாளர் படுகொலை: மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் சம்பூர்வா கிராமத்தில் தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளரின் உடலை மீட்ட போலீஸார், அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக காஷ்மீர் போலீஸார் தங்களது ட்விட்டர் பக்கத்தில்,"தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் பாம்போர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வயல்வெளியில் காவல் உதவி ஆய்வாளரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்ட காயங்களுடன் இறந்துகிடந்தவர்,சம்பூர்வா கிராமத்தைச் சேர்ந்த பரூக் அஹ்மத் மிர், என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வெள்ளிக்கிழமை பணி முடிந்து வீடு திரும்பிய அவர் மாலை தனது வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, பரூக் அஹ்மத் மிர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்" என்று பதிவிட்டுள்ளனர்.

தொடரும் படுகொலைகள்: முன்னதாக, கடந்த 2ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள வங்கிக் கிளைக்குள் நுழைந்து, மேலாளர் விஜய்குமாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் படுகாயம் அடைந்த விஜய்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன்கர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் அந்தக் கிளையில் அப்போதுதான் பணியில் சேர்ந்திருந்தார். அவரது படுகொலை நடந்த அதே நாளில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி ஒருவரும் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. காஷ்மீரி பண்டிட்டுகள் சாலைகளில் இறங்கிப் போராடினர். தங்களின் உயிருக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறினர். தாங்கள் ஜம்முவுக்கு இடம்பெயர விரும்புவதாகவும் கூறினர்.

இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இருவருமே லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்பு படை தெரிவித்திருந்தது. அதில் ஒருவர் ஜூன் 2ல், வங்கி மேலாளரை கொலை செய்த தீவிரவாதி என்பதும் உறுதியானது. இந்நிலையில், நேற்று மாலை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காஷ்மீரில் தனிநபர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பண்டிட் சமூகத்தினர் ஆகியோரை கொலை செய்யும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE