அக்னி பாதை திட்டத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு - நாடு முழுவதும் 12 ரயில்கள் தீவைத்து எரிப்பு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தீவைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பிஹார் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 12 ரயில்களுக்கு தீவைக்கப்பட்டன. போராட்டம் நாடு முழுவதும் சுமார் 300 ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக் கொள்ளும் ‘‘அக்னி பாதை’’ திட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 13-ம் தேதி அறிமுகம் செய்தார்.

இந்நிலையில் இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக பிஹாரில் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. பிஹாரின் பல இடங்களில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது மேலும் 3 ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். ஜம்மு தாவி-கவுகாத்தி எக்ஸ்பிரஸ், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், குகாதியா ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டிருந்த ரயில் ஆகியவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அந்த 3 ரயில்களில் இருந்த 20 பெட்டிகள் எரிந்து நாசமாயின.

300 ரயில்கள் ரத்து

இந்த போராட்டத்தால் நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று காலை தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையம் முன் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காலை 9 மணியளவில் வரத்தொடங்கினர். சிறிது சிறிதாக வந்த கூட்டம் அதிக அளவில் ரயில் நிலையம் முன் சேர தொடங்கினர். இவர்கள் தங்களை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ராணுவ வேலை வாய்ப்பில் சேர உடற்தகுதி பெற்றவர்கள் என்றும், இதுவரை எழுத்து தேர்வு நடக்காததால், வேலையில் சேர முடியாமல் கஷ்டப்படுகிறோம் என்றும், இதனால், அக்னி பாதை திட்டத்தை எதிர்க்கிறோம் என்றும் கூறி திடீரென ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

ரயில் நிலையத்துக்குள் சென்ற இவர்கள் பிளாட்பாரங்களில் உள்ள கடைகளில் இருந்த பொருட்களை எடுத்து வீசினர். ரயில்வே பார்சல் சர்வீஸ் இடத்துக்கு சென்று அங்குள்ள பொருட்களை எடுத்து தண்டவாளத்தின் மீது வீசி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதனை கண்டு ரயில்வே போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது அவர்கள் தண்டவாளங்களில் நடுவே உள்ள கற்களை எடுத்து அவர்களை தாக்கினர். இதில் பல ரயில்வே போலீஸார் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தப்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர்.

அப்போது கல்வீச்சு சம்பவம் தீவிரம் அடைந்தது. இதனை தொடர்ந்து அங்கு போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

இளைஞர் உயிரிழப்பு

அப்போது, சிலர் அங்கு நின்றுகொண்டிருந்த ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைத் தனர். இதனால், போலீஸார் நிலைமையைச் சமாளிக்க துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் வாரங்கல் மாவட்டம், டபீர்பேட்டா பகுதியை சேர்ந்த ராகேஷ் எனும் இளைஞர் உயிரிழந்தார். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயிலில் வைக்கப்பட்ட தீக்கு 4 பெட்டிகள் சேதமடைந்தன.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலரை போலீஸார் கைது செய்தனர். ஆயினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. செகந்திராபாத் ரயில் நிலையத்திலேயே அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர், இவர்களுடன் ரயில்வே துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். செகந்திராபாத் சம்பவத்தால் தென்மத்திய ரயில்வே துறை 57 ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்து, ஹைதராபாத்-ஷாலிமார், அகமத்நகர்-செகந்திராபாத், செகந்திராபாத்-அகமத் நகர் ஆகிய 4 ரயில்களை நேற்று முழுவதுமாக ரத்து செய்தது. ஷீரடி-சாய் நகர், புவனேஷ்வர்-மும்பை ஆகிய ரயில்கள் மாற்று தடங்கள் மூலம் செல்ல அனுமதிக்கப்பட்டது.

செகந்திராபாத் சம்பவத்தால் வட மத்திய ரயில்வே துறையும் 8 ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்வதாகவும், 2 ரயில்களை முழுவதுமாக ரத்து செய்வதாகவும் அறிவித்தது. நாடு முழுவதும் நேற்று மட்டும் 12 ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

வன்முறையை தவிர்க்க...

இந்நிலையில் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் வன்முறையை தவிர்க்குமாறும், ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்