வடமாநிலங்களில் அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக போராட்டம் - ரயில்களுக்கு தீ வைப்பு; பாஜக எம்எல்ஏ கார் மீது தாக்குதல்

By செய்திப்பிரிவு

பாட்னா: அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இளைஞர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன, ரயில்வே சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. சாலைகளில் பேருந்து கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு வைத்துக் கொள்ளப்பட்டு, மற்றவர்கள் ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான தொகையுடன் ஒய்வூதியம் இன்றி வெளியேறும் வகையில் அக்னி பாதை திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

இந்த புதிய கொள்கையை பலதரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அக்னி பாதை திட்டத்தை திரும்பபெறக் கோரி பிஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

பிஹாரின் கைமூர் மாவட்டத்தில்உள்ள பஹாபுவா ரயில் நிலையத்தில் கம்புகளுடன் புகுந்த இளைஞர்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். ரயில் பெட்டி ஒன்றுக்கும் அவர்கள் தீ வைத்தனர். ‘இந்தியன் ஆர்மி லவ்வர்ஸ்’ என்ற பேனரை கையில் வைத்திருந்த இளைஞர்கள் அக்னி பாதை திட்டத்தை திரும்ப பெறக் கோரி கோஷம் எழுப்பினர். பிஹாரின் சப்ரா, கோபால்கன்ஜ் மற்றும் கைமூர் மாவட்டங்களில் மொத்தம் 3 ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன.

பிஹாரின் நவடா நகரில் பா.ஜ.க எம்.எல்.ஏ அருணா தேவியின் காரை வழிமறித்த போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதில் அருணா தேவி, அவரது பாதுகாவலர்கள் இருவர், ஓட்டுனர் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

பிஹாரின் ஆரா ரயில் நிலையத்துக்குள் புகுந்த இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் மீது இளைஞர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். அவர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேஜை, நாற்காலிகளை தண்டவாளத்தில் தூக்கி எறிந்து அவற்றுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. அவர்களை அமைதி காக்கும்படி ஒலிபெருக்கிகள் மூலம் போலீஸார் வேண்டுகோள் விடுத்தனர்.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் முன்பு இளைஞர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகர் மற்றும் பலியா ஆகிய மாவட்டங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கைகள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மத்திய பிரதேசம் குவாலியர் ரயில் நிலையத்தில் நேற்று புகுந்த போராட்டக்காரர்கள் ரயில்கள் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர், சிகர், ஜெய்ப்பூர், நாகர், அஜ்மீர் மற்றும் ஜுன்ஜுனு ஆகிய மாவட்டங்களில் ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் கட்சி தலைமையில், ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹரியாணாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் பல்வால் பகுதி காவல்துறை துணை ஆணையர் கிருஷ்ண குமார் வீட்டில் இருந்த போலீஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். அவர்களை விரட்டியடிக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அக்னி பரீட்சை வேண்டாம்

அக்னிபாதை திட்டம் குறித்து பா.ஜ.க.வை விமர்சித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பதவி இல்லை, ஒய்வூதியம் இல்லை, 2 ஆண்டுகளுக்கு நேரடி ஆட்தேர்வு இல்லை. 4 ஆண்டுகளுக்குப் பிறகு நிலையான எதிர்காலம் இல்லை. ராணுவத்துக்கு மரியாதை இல்லை. வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களின் குரலை கேளுங்கள். இளைஞர்களை அக்னி பாதையில் நுழைக்கும் அக்னி பரீட்சையை மேற்கொள்ள வேண்டாம்” என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்