புதுடெல்லி: ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி வழங்கும் அக்னி பாதை திட்டத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராணுவத்தில் சேர்வதைக் கனவாகக் கொண்டு தயாராகும் இளைஞர்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்தியாவுக்கு இரண்டு பக்கங்களில் இருந்து அச்சுறுத்தல் நிலவும் சூழலில் அக்னி பாதை திட்டமானது நமது படைகளின் செயல்திறனை குறைக்கும். ராணுவத்தின் மாண்பு, பாரம்பரியம், வீரம் மற்றும் ஒழுக்கத்தை சமரசம் செய்யும் முயற்சிகளை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக, ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்களும் இளம்பெண்களும் முப்படைகளில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்புக் குரல்கள்: ‘அக்னி பாதை’ திட்டத்திற்கு ராகுல் காந்தி மட்டுமல்ல ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் சிலரும் கூட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்தத் திட்டத்தால் வீரர்களின் போராடும் எண்ணத்தில் தொய்வு ஏற்படும். இதனால் ஆபத்து நேரலாம் என்று எச்சரிக்கின்றனர்.
ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் பிஎஸ் தனோ தனது ட்விட்டரில் இரண்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். ‘அக்னி பாதை’ திட்டத்தில் இரண்டு விஷயங்களை மேம்படுத்தலாம் என நினைக்கிறேன். ஒன்று, புதிதாக பணியில் சேர்வோருக்கான பணிக்காலத்தை 7 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும். இரண்டாவது, ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவோருக்காக அவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
அதேபோல் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் யாஷ் மோர், "ராணுவ வாழ்க்கையும் பணியும் பணத்தால் மதிப்பிடக்கூடியது அல்ல. அதில் சிக்கனம் செய்து அரசு செலவினங்களைக் குறைப்பதும் நல்ல யோசனை அல்ல" என்று கூறியுள்ளார்.
முன்னாள் ராணுவ வீரர்கள் நலவாரிய உறுப்பினர் ஒருவர், அக்னி பாதை திட்டம் என்பது தனிப்பட்ட ராணுவத்தை உருவாக்குவது போன்றது என்று எச்சரித்துள்ளார். 4 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் கேங்ஸ்டர்களாக மாறினால் அரசு என்ன செய்யும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
அரசுத் தரப்பில் மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான விகே சிங் கூறுகையில், 'அத்திட்டம் பற்றி முழு விவரம் எனக்குத் தெரியவில்லை. அதை நடைமுறைப்படுத்தினால் தான் அதைப் பற்றி முழுமையாகத் தெரியவரும்" என்றார்.
‘அக்னி பாதை’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார் மாநிலம் முசாபர்பூர், பக்சார் மாவட்டங்களில் போராட்டம் கிளம்பியது. அப்போது பேசிய இளைஞர் ஒருவர், "ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே வேலை என்றால். அதற்குப்பின்னர் நிலையான வேலை பெற வேறு ஏதும் படிப்பு படிக்க வேண்டும். அப்படியே படித்தாலும் அந்த வேலைக்காக ஏற்கெனவே படித்து தயாராக இருப்பவர்களுடன் நாங்கள் போட்டிபோட முடியாது. வயது ரீதியாக பின்தங்கிவிடுவோம்" என்றார்.
மற்றொரு இளைஞர், " நான் 2 ஆண்டுகளாக ராணுவத்தில் சேர உடற்தகுதியில் ஈடுபட்டு வருகிறேன். இப்போது 4 ஆண்டுகள் மட்டுமே பணி எனக் கூறுகின்றனர். நான் வெறும் 4 ஆண்டுகள் பணிக்காக இத்தனை மெனக்கிடல் செய்ய வேண்டுமா" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய ராணுவ பட்ஜெட்டில் நான்கில் ஒரு பகுதி ஓய்வூதியத்துக்காக செலவிடப்படுகிறது. அக்னி பாதை திட்டத்தில் ஓய்வூதியம் கிடையாது என்பதால் இந்த தொகை சேமிக்கப்பட்டு முப்படைகளையும் நவீனப்படுத்த முடியும் என்பதாலேயே இத்திட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ராணுவத்தில் அக்னி வீரராக சேர்பவர் கல்வி அடிப்படையில் 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்தால் அவர் சேவை முடிக்கும்போது 12 ஆம் வகுப்பு கல்வி தகுதி சான்றிதழ் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து தெளிவாக எந்த அறிவிப்பும் இல்லை.
எதிர்ப்பு ஒருபுறம் வாக்குறுதி மறுபுறம்: ‘அக்னி பாதை’ திட்டத்திற்கு இவ்வாறாக பரவலாக எதிர்ப்பு கிளம்பிவருகிறது. இவை ஒருபுறம் இருக்க, ‘அக்னி பாதை’ திட்டத்தின்கீழ் முப்படைகளிலும் 4 ஆண்டு சேவையில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு, 3 ஆண்டு பட்டப்படிப்பை இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (இக்னோ) உருவாக்க உள்ளது. இதற்கு ஏஐசிடிஇ, என்சிவிஇடி மற்றும் யுஜிசி அங்கீகாரமும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர்களின் சிறந்த எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி `அக்னி பாதை` திட்டத்தை அறிமுகம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து 4 ஆண்டு பணியை முடிக்கும் அக்னி வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் சேர முன்னுரிமை வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago