'நிபந்தனையற்ற அன்புக்கு சிறந்த உதாரணம்' - '777 சார்லி' படம் பார்த்து கண்கலங்கிய கர்நாடக முதல்வர்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் வெளியாகியுள்ள 777 சார்லி திரைப்படத்தை பார்த்துவிட்டு, செய்தியாளர்கள் முன்னிலையில் கண் கலங்கினார்.

கிரண்ராஜ் இயக்கத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடித்திருக்கும் படம் '777 சார்லி'. இந்த படத்தில் பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாபி சிம்ஹா நடிக்கும் முதல் கன்னட திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களுடன் வரவேற்பை பெற்று வருகிறது.

ஒரு மனிதனுக்கும் அவனது நாய்க்கும் இடையேயான பிணைப்பைக் கொண்டாடும் சினிமாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தை நேற்று இரவு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பார்த்தார். திரைப்படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தவர் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். திரையரங்கில் இருந்து வெளியே வந்த அவரின் கண்களில் கண்ணீர் பெருகியது.

சமீபத்தில் இறந்து போன தனது குடும்பத்தின் செல்லப்பிராணியான சன்னி என்ற நாயை நினைத்து அவர் உணர்ச்சிவசப்பட்டார். இதை நினைவுகூர்ந்த பசவராஜ் பொம்மை, "மனிதனுக்கும் நாய்க்கும் இடையே உள்ள அன்பு தூய்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்புக்கு சிறந்த உதாரணம்" என்றவர் படக்குழுவை வெகுவாக பாராட்டினார்.

பின்னர் பேசிய பசவராஜ், "கர்நாடக அரசு சார்பில், நாய் பயிற்சியாளர்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் வகுக்கும் திட்டம் உள்ளது. தெருநாய்களை தத்தெடுப்பதை ஊக்குவிக்க வேண்டும். தெருநாய்கள் மற்றும் பிற விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும். மக்கள் தங்கள் கால்நடைகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். மனிதர்-நாய் உறவின் உணர்வுபூர்வமான அம்சங்களை முன்வைப்பதில் இயக்குனர் கிரண் வெற்றி பெற்றுள்ளார். ரக்ஷித் ஷெட்டி. நடிப்பு பிரமாதம். இது ஒரு சிறந்த படம். 777 சார்லி மற்றும் கேஜிஎஃப் 2 போன்ற படங்களின் மூலம் கன்னடத் திரைப்படங்கள் சர்வதேச அளவில் புகழ் பெறுவதன் மூலம் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE