நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஜார்க்கண்ட் பாஜக பிரமுகர் கைது

By செய்திப்பிரிவு

ஆதித்யாப்பூர்: முகம்மது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஜார்க்கண்ட் மாநில பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அந்த மாநில காவல்துறை உறுதி செய்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா, முகம்மது நபிகள் குறித்து சர்ச்சையான கருத்தை பதிவு செய்திருந்தார். அந்த விவகாரம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. தொடர்ந்து அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது பாஜக. இருந்தாலும் அந்தக் கருத்தால் இஸ்லாமிய மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதையடுத்து, இந்தியாவின் சில மாநிலங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்கள் இதில் அடங்கும்.

உத்தரப் பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கைது செய்தது அந்த மாநில அரசு. இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடு புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.

இந்நிலையில், நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தின் செரைகேலா-கார்ஸ்வான் மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் அனிஷா சின்ஹா கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 295A மற்றும் 153A பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்து. அவரது மொபைல் போனை கைப்பற்றி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது ஃபேஸ்புக் பதிவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தின் பாஜக தலைவர் பிஜய் மஹதோ, இந்தக் கைது செய்தியை அறிந்து வேதனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது தவறை உணர்ந்த அனிஷா, அதற்கு காவல் நிலையத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இருந்தாலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் உத்தரவின் பேரில் பாஜக பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE